உணவில் சுகாதாரம் கேள்விக்குறி! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்
பல்லடம்: சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் விற்பனை பல்லடம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இத்துடன், தொழில், வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள் பல்லடத்துக்கு வந்து செல்கின்றனர்.தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நகராட்சி பகுதியில், சுகாதாரமற்ற முறையிலான உணவகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறைந்த சம்பளத்துக்கு கூலி மற்றும் பனியன் நிறுவனங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பலரும், சாதாரண உணவகங்கள் மற்றும் ரோட்டோர கடைகளுக்கு தான் செல்கின்றனர்.குறைந்த விலைக்கு உணவுகள் வழங்கும் இதுபோன்ற சாதாரண கடைகள் சிலவற்றில், சுகாதாரம் பின்பற்றப்படுவதில்லை.உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், தரமற்ற உணவுப் பொருட்கள் பயன்படுத்தியும், பாதுகாப்பற்ற முறையிலும் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. விலை குறைவு காரணமாக இதுபோன்ற கடைகளை நாடும் தொழிலாளர்கள், பொதுமக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்வதில்லை. பொதுமக்களை பாதிக்கும் இதுபோன்ற கடைகளில் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரத்தை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.