குரூப் - 4 தேர்வெழுதும் மாணவருக்கு இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது.கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், பில்கலெக்டர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் -4 தேர்வு, வரும் ஜூலையி்ல நடக்கிறது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், குரூப் - 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நேற்று முதல் துவங்கியுள்ளது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி வகுப்பை துவக்கிவைத்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''குரூப் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், ஊக்கத்தோடு படிக்கவேண்டும். மாதிரி தேர்வுகள் எழுத வேண்டும்.ஒவ்வொரு மாதிரித்தேர்விலும் என்னென்ன தவறு செய்துள்ளோம் என்பதை, விடைத்தாள் உதவியோடு ஆய்வு செய்து, திருத்திக்கொள்ள வேண்டும். தற்போது, கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் உடுமலை ஆகிய இரண்டு இடங்களில், பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. மூன்றாவதாக, குண்டடத்தில் விரைவில் துவங்கப்பட உள்ளது,'' என்றார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:இலவச பயிற்சி வகுப்பில், 160 மாணவ, மாணவியர் இணைந்துள்ளனர். வரும் ஜூன் மாதம் வரை, ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படும். குரூப் தேர்வில், பொது தமிழ், 100 கேள்வி, கணக்கு மற்றும் நுண்ணறிவு 25, பொது அறிவு, 75 கேள்வி கேள்விகள் கேட்கப்படும்.ஒரு கேள்விக்கு, 1.5 மதிப்பெண் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அதற்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 15 நாளுக்கு ஒருமுறை மாதிரி தேர்வு நடத்தி, திறனாய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பயிற்சி வகுப்பு துவக்க விழாவில், வேலை வாய்ப்பு அலுவலக கோவை மண்டல இணை இயக்குனர் ஜோதி மணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.