விநாயகர் சதுர்த்திவிழா வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
உடுமலை; விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் பிரதிஷ்டை மற்றும் விசர்ஜனம் செய்யும் இடங்கள் குறித்து, அதிகாரிகள் தெரிவித்துள்ளர். விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில், பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான வழிமுறைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.அதில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வோர், வருவாய் கோட்டாட்சியர்களிடம் அனுமதி பெற்று, சிலைகளை நிறுவ வேண்டும். சிலைகள், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், களிமண்ணால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நீர் நிலைகளை மாசுபடுத்தாத, இயற்கை வண்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வண்ண பூச்சு சிலைகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் உயரம், பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து, அதிகபட்சம் பத்து அடிக்கும் மேல் இருக்கக்கூடாது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும் பகுதியில், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களால் மேற்கூரை அமைக்கக்கூடாது; பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. ஒவ்வொரு சிலைக்கும், 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். சிலைகள் வைக்கும் போது, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், முன் அனுமதி பெற்ற பிறகே, அமைக்க வேண்டும். அதே போல், போலீசார் அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே, விசர்ஜன ஊர்வலம் நடத்த வேண்டும். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை, உடுமலை எஸ்.வி., புரம் பி.ஏ.பி., வாய்க்கால், மற்றும் கணியூர் அமராவதி ஆற்றில் மட்டுமே விசர்ஜனம் செய்ய வேண்டும். விதிமுறைகளை கண்டிப்பாக சிலைகள் அமைக்கும் அமைப்பினர் பின்பற்ற வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.