விநாயகர் சிலை விற்பனை ஜோர்
திருப்பூர்; விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூரில் விநாயகர் சிலைகள் விற்பனை ஜோராக நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா, நாளை (27ம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மதுரையில், குடிசை தொழிலாக நடந்துவரும் சிலை உற்பத்தியாளர்கள் தயாரித்த களிமண் சிலைகள், விற்பனைக்காக திருப்பூரில் அணிவகுத்துள்ளன. விநாயகர் உருவம் கொண்ட இரும்பு அச்சுகளில் வைத்து சிலை உருவாக்கப்படுகிறது. சிறிய அளவிலான, வண்ணம் தீட்டப்பட்ட சிலைகள், வண்ணம் தீட்டாமல் கண் திறந்த சிலைகள் என, விதவிதமான சிலைகள் விற்கப்படுகின்றன. பூமார்க்கெட் பகுதியில், அதிக அளவு சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சிலை விற்பனையாளர்கள் கூறுகையில், 'வீடுகளில் வழிபாடு நடத்த, 50 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை சிலைகள் வைத்துள்ளோம். இந்தாண்டு, மதுரையில் கையால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளும் வந்துள்ளன. அந்த சிலைகள், 50 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மேலும், வெப்பத்தில் பதப்படுத்திய சிலைகளும் வந்துள்ளன; அவை நீரில் கரைய கூடுதல் நேரம் தேவைப்படும்,' என்றனர். பூ விற்பனை ஜோர் அருகம்புல், வெள்ளை எருக்கன்பூ மாலை மற்றும் அலங்கார குடை, வெள்ளை எருக்கன் கட்டையில் செய்த விநாயகர் சிலை விற்பனை நேற்றே துவங்கிவிட்டது. அலங்கார குடை, 70 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. பூ மார்க்கெட்டில், வழக்கத்தை விட நேற்றே கூட்டம் அதிகமாக இருந்தது. செவ்வந்தி, சம்பங்கி, செவ்வரளி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூ, மருகு, மல்லி பூக்களை, பூ வியாபாரிகள் அதிகம் வாங்கி சென்றனர். பழக்கடைகளில், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, எலுமிச்சை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, விற்பனையும் நேற்றே மும்முரமாக நடந்தது.