உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை - தெருவிளக்கு - வெறிநாய்  பிரச்னை அதிகரிப்பு; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் வாசிப்பு: அ.தி.மு.க., - காங்., வெளிநடப்பு

குப்பை - தெருவிளக்கு - வெறிநாய்  பிரச்னை அதிகரிப்பு; மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் வாசிப்பு: அ.தி.மு.க., - காங்., வெளிநடப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில், சொத்து வரி பிரச்னையில் அ.தி.மு.க.,வும், தெரு விளக்கு பிரச்னையில் காங்., கவுன்சிலரும் வெளி நடப்பு செய்தனர். வரி உயர்வு குறித்து அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது.திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, இம்மாதம் ஓய்வு பெறும் மாநகராட்சி கமிஷனர், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்பது பேர்; புதிதாக பணியில் இணைந்துள்ள அதிகாரிகளுக்கும் மன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.விவாத தொகுப்பு:----------------கோபால்சாமி (தி.மு.க.,): வார்டு 6 மற்றும் 18க்கும் இடையேயுள்ள பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மின் தடை காரணமாக கழிவு நீர் உறிஞ்சும் பணி தடைபட்டு பெரும் அவதி நிலவுகிறது. மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டும்.சேகர் (அ.தி.மு.க.,): எனது வார்டு பகுதியில் உள்ள கே.ஆர்.வி., லே அவுட்டில் உள்ள சிறுவர் பூங்கா தனியார் நிறுவனம் சார்பில் புனரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு லிப்ட் பேனல் அமைக்க குழி தோண்டி கற்களை சேதப்படுத்தி, டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளன. இந்த பணி துவங்கும் முன்னரே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்ற பின்னரும், ஒப்பந்ததாரர் மீறியுள்ளார். பூங்கா புனரமைப்பு செய்த நிறுவனம் தற்போது பின் வாங்கி விட்டது.விஜயலட்சுமி (காங்.,): காங்கயம் ரோட்டில் எனது வார்டு பகுதியில் உள்ள, 130 தெரு விளக்குகளில் 86 விளக்குகள் எரியாமல் உள்ளது. மாதக்கணக்கில் புகார் கூறியும் எந்த தீர்வும் இல்லை. இரவு நேரம் அரிக்கேன் விளக்குடன் தான் மக்கள் நடக்க வேண்டியுள்ளது. தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மண்டல கூட்டத்தில் பேசிய போது, 15 நாளில் தீர்வு ஏற்படும் என்றனர். மாதக்கணக்காகியும் நடவடிக்கை இல்லை.(தெரு விளக்கு பிரச்னையை கண்டித்து கையில் அரிக்கேன் விளக்கையும், தெருநாய் பிரச்னை குறித்து பதாகையும் ஏந்தி வெளி நடப்பு செய்தார்)ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): திடக்கழிவுபிரச்னையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். பிற பகுதிகள் போல் இல்லாமல் இங்கு பல வகையில் குப்பை சேருகிறது. இது, 30 ஆண்டு காலமாக உள்ள பிரச்னை. 14 லட்சம் மக்கள் பாதிக்கப்படும் பிரச்னை. வரி உயர்வு பிரச்னையில், பல வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்துள்ளோம். கோவை அளவுக்காவது வரி விதிப்பு ஏற்படுத்த வேண்டும்.தங்கராஜ் (பா.ஜ.,): திடக்கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்.நாகராஜ் (ம.தி.மு.க.,): பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்க வேண்டும். அது கண்காணிக்கப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை பிரச்னையில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.ராஜேந்திரன், இ.கம்யூ.,:ஸ்மார்ட் சிட்டி திட்ட ரோடுகளில் நடைபாதை கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. ராமு காலனி குடிநீர் தொட்டி மோசமான நிலையில் உள்ளது. இரண்டு மாதமாக இதை மாற்ற வேண்டும் என்று கேட்டு வருகிறேன். அதிகாரிகள் ஒருவருக்கொருவர் கையைக் காட்டி தப்பிவிடுகின்றனர்.செல்வராஜ் (இ.கம்யூ.,):வேலம்பாளையத்தில், 40 கோடி ரூபாய் செலவில் கட்டிய மருத்துவமனை திறக்காமல் கிடக்கிறது. வார்டு 12 மற்றும் 14 ஆகிய பகுதிகளிலிருந்து 11 வது வார்டில் இணைக்கப்பட்ட 28 ரோடுகளில், 19 ரோடுகளில் பணியாற்ற துாய்மைப் பணியாளர்கள் இல்லை. மூன்றாண்டாக, அலுவலக ஆவணங்களில் வார்டு எண் மாற்றாமல் உள்ளது. லே அவுட்டுக்கு அப்ரூவல் கட்டணம் வாங்கி விட்டு, தனி சைட்டுக்கு அப்ரூவல் கட்டணம் வசூலிக்கின்றனர். இது என்ன நடைமுறை என்று தெரியவில்லை. தாரபுாரம் ரோட்டில், 24 வீடுகளில் ஆறு மாதமாக குடிநீர் சப்ளையில்லை.மணிமேகலை (மா.கம்யூ.,):புதிய வீட்டு குழாய் இணைப்பு, 3 மாதமாகியும் வழங்கவில்லை. ஏழு லட்சம் ரூபாய் செலவில், குப்பாண்டாம்பாளையம் சமுதாய கூடம் வெறுமென பெயின்ட் மட்டும் அடித்துள்ளனர். மராமத்து எதுவும் செய்யவில்லை. எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும். குழாய் பதிக்க தோண்டிய கான்கிரீட் ரோடுகள் மாதக்கணக்கில் சரி செய்யாமல் உள்ளது. என் வீட்டின் முன் கூட அந்த நிலையில் தான் உள்ளது.காந்திமதி (தி.மு.க.,): எங்கள் பகுதிக்கு குடிநீர் வந்து, 12 நாளாகிறது. குடிநீர் தொட்டி வளாகத்தில் ஆட்கள் இல்லை. இதனால், முறையாக குடிநீர் நிரப்புவது, வினியோகிப்பது நடக்காமல் உள்ளது. குப்பை அகற்றி 15 நாட்களாகிறது.அருணாசலம் (இ.கம்யூ.,): கவுன்சிலர் பதவிக்கு வந்து, 3 ஆண்டுகளாக கேட்கிறேன். எங்கள் பகுதிக்கு பாதாள சாக்கடை இது வரை வரவில்லை. தெரு விளக்கு பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது. மின் கம்பி இழுக்க பல மாதமாக எந்த நடவடிக்கையும் இல்லை. வார்டுக்குள் தலைகாட்டமுடியவில்லை.சாந்தாமணி (ம.தி.மு.க.,): வார்டில் இருந்த, 8 பேட்டரி வாகனம், 4 ஆகவும், 20 பணியாளர்கள் 10 ஆகவும் மாறிவிட்டது. அதிகாலை முதல் துாய்மைப் பணியாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று பணியாற்றுகிறேன். நல்ல வாகனங்கள் வழங்க வேண்டும். தள்ளுவண்டிகள் பயன்தருவதில்லை. நிறுவனங்களிலிருந்து குப்பைகள் வாங்குவது நின்று விட்டது. அதற்கு தனி வாகனம் வழங்க வேண்டும். தெரு விளக்கு பிரச்னை, மங்கலம் ரோடு ஆக்கிரமிப்பு பிரச்னைகள் தீர்க்க வேண்டும்.ஆனந்தி (அ.தி.மு.க.,): எனது வார்டில் 15 கி.மீ., ரோடுகளும், 35 கி.மீ., மழை நீர் வடிகாலும் உள்ளது. 132 வீதிகள் உள்ளன. ஆனால், 3 பேர் மட்டுமே துாய்மைப்பணிக்கு உள்ளனர். சாக்கடை கழிவு நீரில் புழுக்கள் நெளிகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், இதனை விட பெரிய பிரச்னை வரும்.

சொன்னார்கள்... செய்யவில்லை

---------------------------முன்னதாக, கூட்டத்தில், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசுகையில், ''சொத்து வரி உயர்வு பிரச்னையில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. வரி உயர்த்தி, 3 ஆண்டாகியும், எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பு வரும்; பட்ஜெட்டில் அறிவிப்பு வரும். முதல்வர் அறிவிப்பார். அரசாணை பிறப்பிக்கப்படும் என சொல்லி கொண்டேயிருந்தனர். ஆனால், கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது. இப்பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகத்தின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டும்.மங்கலம் ரோடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி எப்போது நடக்கும். கருவம்பாளையத்தில் தாழ்வாக உள்ள, 70 வீடுகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் உள்ளே புகும் பிரச்னை தீர்க்கப்படவில்லை. மழையால் சேதமாகும் ரோடுகளை பேட்ச் ஒர்க் செய்ய சிறப்பு நிதி ஏற்படுத்த வேண்டும். வரி உயர்வு பிரச்னையில் உரிய தீர்வுகாண வலியுறுத்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்கிறோம்,'' என்றார்.அவர் பேசி முடித்ததும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 'வெளி நடப்பு செய்தால் வரி குறைந்து விடும் என்றால் நானும் கூட சேர்ந்து வெளிநடப்பு செய்கிறேன்,' என மேயர் கூறினார். இதனால், அவருடன் வாக்குவாதம் செய்தபடியே அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறின். அப்போது, தி.மு.க., கவுன்சிலர் சாமிநாதன், கோபால்சாமி ஆகியோர், 'வரியை உயர்த்தியது அ.தி.மு.க., ஆட்சியில் தான்,' என்றனர். இதனால், இரு தரப்பிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. கூட்டரங்கிலிருந்து வெளியே வந்த கவுன்சிலர்கள் வெளியில் அமர்ந்து கோஷம் எழுப்பி, தர்ணாவில் ஈடுபட்டு கிளம்பினர்.

இனி, கருப்பு சட்டை தானா...

கவுன்சிலர் செந்தில்குமார் (காங்.,) பேசுகையில், ''வரி உயர்வு பிரச்னையில் தீர்வு காணும் வரை மன்ற கூட்டத்தில் கருப்பு சட்டையுடன் பங்கேற்பேன் என்று சபதம் எடுத்தேன். மாநகராட்சி நடவடிக்கை என்னை நிரந்தரமாகவே கருப்பு சட்டை அணிய வைத்து விடும் போல் உள்ளது. இதில் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. அனைத்து எதிர்பார்ப்புகளும் ஏமாற்றமாகி விட்டது. கோவையுடன் இணைந்து திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணியை விரைவுபடுத்த வேண்டும். குப்பை அகற்ற பாறைக்குழிகள் புதிதாக தேடிப்பிடிக்கப்பட்டுள்ளது என்றால், திடக்கழிவு மேலாாண்மை திட்டம் என்ன ஆயிற்று? தற்போதுள்ள பாறைக்குழி எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும்? புதிய குழிகள் எவ்வளவு நாள் கைகொடுக்கும்?,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி