உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கன்றுகளை பராமரிக்க கோசாலை அவசியம்! கிடப்பில் பக்தர்கள் கோரிக்கை

கன்றுகளை பராமரிக்க கோசாலை அவசியம்! கிடப்பில் பக்தர்கள் கோரிக்கை

உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலுக்கு, தானமாக வழங்கப்படும் கன்றுகளை பராமரிக்க கோசாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஹிந்து அறநிலையத்துறையினர் கண்டுகொள்ளாததால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.உடுமலை சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடைகளுக்காக பொங்கலையொட்டி, மூன்று நாட்கள் கோவிலில் நடக்கும் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.மேலும், பொங்கலன்று கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகளை, ஓராண்டு வரை பராமரித்த பிறகு, அப்பகுதி மக்கள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்குகின்றனர். கால்நடை வளம் பெருக, கோவிலுக்கு வேண்டுதல் வைப்பவர்களும், கால்நடைகளை தானமாக வழங்குவது வழக்கம். கிடாரி கன்று, காளை, ஆடு, சேவல் ஆகியவற்றை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.இவ்வாறு, கோவிலுக்கு வழங்கப்படும் கால்நடைகளை ஹிந்து அறநிலையத்துறையினர், இரண்டு நாட்கள் கோவிலில் வைத்து பராமரித்த பின்னர், பிற மாவட்டங்களிலுள்ள கோசாலைக்கு அனுப்புகின்றனர்.இதற்கான பராமரிப்பு செலவு என, கால்நடைகளை வழங்கும் பக்தர்களிடம், ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கட்டண முறையால், பாதிக்கப்படும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்தாண்டும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.கால்நடைகளுக்கென பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகளை, அங்கேயே பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது.அதற்கேற்ப திருவிழாவின் போது, கேளிக்கை, விளையாட்டு சாதனங்கள் அமைத்தல் மற்றும் தற்காலிக கடைகள் அமைக்க, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், ஏலம் விடப்படுகிறது.இவ்வாறு, ஆண்டுதோறும், கோவிலுக்கு கிடைக்கும் வருவாயில், கோசாலை அமைத்து, காணிக்கையாக பெறப்படும் கன்றுகளை பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோசாலை அமைக்க, கோவிலுக்கு சொந்தமான நிலம், கிணறு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உள்ளன.இது குறித்து பக்தர்கள் கூறுகையில், 'கால்நடைகளுக்கென பிரத்யேகமாக உள்ள ஆல்கொண்டமால் கோவிலில், கோசாலை இல்லாதது வேதனையளிக்கிறது. தானமாக வழங்கும் கன்றுகளை, பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கும் வழங்கி வருகின்றனர். தானமாக வழங்கும் கன்றுகளை, கோவிலில் கோசாலை அமைத்து பராமரித்தால், பல்வேறு சிறப்புகள் கோவிலுக்கு கிடைக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ