மாநில பயிலரங்கில் அரசு கல்லுாரி மாணவர்
திருப்பூர்; மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., சார்பில், திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலையில், இன்று துவங்கி, 3 நாட்களுக்கு 'பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுப்பதற்கான இளைஞர்கள்' என்ற தலைப்பில் மாநில அளவிலான பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலையில் இருந்தும், 225க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு -2 சார்பில், விலங்கியல் துறை மாணவர் தீபன் சந்தோஷ் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே அரசுக்கல்லுாரி மாணவர் இவர்தான். தீபன் சந்தோஷை, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்.