பால்பேட்மின்டன் போட்டி அரசு பள்ளிகள் அபாரம்
திருப்பூர், அக். 26- பள்ளி கல்வித்துறை சார்பில், அலகுமலை வித்யாலயா பள்ளியில், மாவட்ட மாணவர் பால்பேட்மின்டன் போட்டி நேற்று நடந்தது. ஏழு குறுமையங்களில் இருந்து, 65 பேர் பங்கேற்றனர். போட்டிகளை அலகுமலை வித்யாலயா பள்ளி செயலாளர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். 19 வயது பிரிவில், சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது; 2 - 0 என வித்ய விகாசினி பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. 17 வயதினர் பிரிவில் அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்; வித்ய விகாசினி பள்ளி அணி இரண்டாமிடம். 14 வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி முதலிடம், உடுமலை, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி அணி, 2வது இடம் பெற்றது. 14 வயது பிரிவினருக்கான சிலம்பம் போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நேற்று, அலகுமலை வித்யாலயா பள்ளியில், 17 மற்றும் 19 வயது பிரிவினருக்கான சிலம்பம் போட்டிகள் நடந்தது. ஏழு குறுமையங்களில் இருந்து, 63 பேர் பங்கேற்றனர். ஒரே பள்ளியில் ஆறு அணி தகுதி பள்ளிகல்வித்துறை சார்பில், மாவட்ட மாணவர் பீச் வாலிபால் போட்டி, வித்ய விகாசினி பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் முதலிடம் பெற்ற பள்ளி அணிகள் பங்கேற்றன. பள்ளி தாளாளர் தர்மலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார். நஞ்சப்பா பள்ளி உடற்கல்வி இயக்குனர் நடராஜன் முன்னிலை வகித்தார். பதிநான்கு வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி, காங்கயம், புனித அமல அன்னை பள்ளி அணிகள் மோதின. 2 - 1 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி வெற்றி பெற்றது. 17 மற்றும் 19 வயது பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி வென்றது; 2 - 0 என்ற செட் கணக்கில் உடுமலை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. நேற்று முன்தினம் மாவட்ட மாணவியர் பீச் வாலிபால் போட்டியில், 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவையும் கைப்பற்றி, மாநில போட்டிக்கு தகுதி பெற்ற திருப்பூர், காங்கயம் ரோடு, வித்யவிகாசினி பள்ளி அணி, நேற்று நடந்த மாணவர் பிரிவிலும், 14, 17 மற்றும் 19 வயது மூன்று பிரிவையும் கைப்பற்றி, அசத்தியது. இதனால், இப்பள்ளியை சேர்ந்த ஆறு அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றன.