உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமை வழிச்சாலையா? புற வழிச்சாலையா? பல்லடம் மக்கள் குழப்பம்

பசுமை வழிச்சாலையா? புற வழிச்சாலையா? பல்லடம் மக்கள் குழப்பம்

பல்லடம்; பல்லடத்தில், பசுமை வழி மற்றும் புறவழிச்சாலை திட்டங்கள் ஒரே திசையில் கொண்டுவர திட்டமிடப்பட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்துக்கு பிரதானமாக உள்ளது. பல்லடம் வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலையுடன், திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, கொச்சி, உடுமலை, அவிநாசி ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. பிரதான மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் நகரப் பகுதியில் இணைவதால், பல்லடத்தில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருவழிப்பாதையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.எதிர்காலத்தில், வாகன போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், பல்லடத்தில், உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதுடன், புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

கிடப்பில் திட்டங்கள்

கரூர் - -கோவை பசுமைவழிச் சாலை திட்டம், விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டது. கடந்த, ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காளிவேலம்பட்டி - - மாதப்பூர் புறவழிச் சாலையும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த, ஏழு ஆண்டுகளாக, பல்லடத்துக்கான எந்த வித திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. ஆய்வு செய்வதும், பின், கிடப்பில் போடுவதுமே தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே, சட்டசபை கூட்ட தொடரில், கொச்சி ரோட்டில் இருந்து மாதப்பூரை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றுஅமைச்சர் வேலு தெரிவித்தார். இதற்கான நில அளவீடு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

கையக நிலங்களின் கதி?

பொதுமக்கள் கூறியதாவது: பசுமை வழிச்சாலை, காரணம்பேட்டை, பணிக்கம்பட்டி, வெங்கிட்டாபுரம், சித்தம்பலம் கிராமங்கள் வழியாக மாதப்பூர் வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் தற்போதும் பூஜ்ஜிய மதிப்பில் தான் உள்ளன. இதேபோல், காளிவேலம்பட்டி -- மாதப்பூர் புறவழிச்சாலைக்கு கையகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலங்களின் மதிப்பும் பூஜ்ஜியத்தில் தான் உள்ளன. இதற்கிடையே, பணிக்கம்பட்டி - - மாதப்பூர் வரை புறவழிச் சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வரிப்பணம் வீணாகும்

பசுமை வழிச்சாலை வருமா, இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை. அவ்வாறு, வருமானால், இதே திசையில் புறவழிச் சாலை எதற்கு என்ற கேள்வி எழுகிறது. பசுமை வழி சாலை வரும்போது, புறவழிச்சாலை அமைக்கப்பட்டால், திட்டம் வீணாவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணாகும். ஒரே திசையில் மேற்கொள்ளப்படும் இரு திட்டங்களால், ஏராளமானோர் நிலங்களை இழக்க வாய்ப்பு உள்ளது.எந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்பதை உறுதி செய்த பின், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அதிகாரிகளிடம் பொதுமக்கள் பாய்ச்சல்

பல்லடம் - - கொச்சி ரோடு, பணிக்கம்பட்டி -- தாராபுரம் ரோட்டை இணைக்கும் வகையிலான புறவழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த வேண்டி, அளவீடு செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பணிக்கம்பட்டி கிராமத்தில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம், கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.பொதுமக்கள் கூறுகையில், 'புறவழிச்சாலை திட்டத்தின் துாரம், எந்தெந்த கிராமங்கள் வழியாக செல்கிறது என்பது உள்ளிட்ட எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. திடீரென, புறவழிச் சாலைக்கு அளவீடு செய்வதாக கூறுகிறீர்கள். ஏற்கனவே,கிராமப் பகுதிகளை மையப்படுத்தி குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அளவீடு செய்வதாக கூறி யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதே எங்களுக்கு தெரியவில்லை.இப்பகுதியில் நிலங்களை விற்கவும், வாங்கவும் முடியாத சூழல் உள்ளது. திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்த பின், முறையாக அறிவிப்பு வெளியிட்டுஅளவீடு பணி மேற்கொள்ளுங்கள்' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'அரசு உத்தரவின் பெயரில் தற்போது ஆய்வுப்பணி தான் மேற்கொண்டு வருகிறோம். இதன்படி, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு, புறவழிச்சாலை எந்த வழியாக செல்கிறது, கையகப்படுத்தப்படும் நிலங்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்படும். எனவே, தடையின்றி பணிகள் நடக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்றனர்.----பாக்ஸ்புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்ள சென்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய பணிக்கம்பட்டி கிராம மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
ஏப் 11, 2025 16:11

பல்லடம் தற்போது உள்ள சாலையில் சுமார் 3கிலோ மீட்டர் மேம்பாலம் அமைப்பதே சிறந்த முடிவாக இருக்கும். தாராபுரம் சாலை முதல் செட்டிபாளையம் சாலை வரல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை