உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைகேட்பு கூட்டம் சடங்குக்காக...! அதிகாரிகள் ஆப்சென்ட்.. விவசாயிகள் அப்செட்

குறைகேட்பு கூட்டம் சடங்குக்காக...! அதிகாரிகள் ஆப்சென்ட்.. விவசாயிகள் அப்செட்

திருப்பூர்: திருப்பூரில், இம்மாதம் கலெக்டர் தலைமையிலான மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நடத்தப்படவில்லை. திருப்பூர் கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டமும் ஒப்புக்கு நடத்தப்பட்டதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கியது, திருப்பூர் வருவாய் கோட்டம்; கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., தலைமையில், மாதம்தோறும் மூன்றாவது வாரம் நடத்தப்படுவது வழக்கம். கூட்டம் நடைபெறும் தேதி, நேரம் குறித்த விவரங்கள், பத்து நாள் முன்னரே விவசாய அமைப்பினருக்கு தெரிவிக்கப்படும். இம்மாதம் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்துவது தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகம் வாயிலாக எவ்வித முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. சில விவசாய அமைப்பினருக்கு மட்டும், நேற்றுமுன்தினம் அவசரகதியில் அழைத்து, 30ல்(நேற்று) குறைகேட்பு கூட்டம் நடைபெறும் என, போனில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காலை, 11:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் துவங்கியது. முன்னறிவிப்பு இல்லாததால், குறைந்த, விவசாய அமைப்பினர் பத்து பேர் மட்டுமே பங்கேற்றனர். காலை, 11:15 மணிக்கு கூட்டம் துவங்கிய நிலையில், தலைமை வகித்து நடத்தவேண்டிய ஆர்.டி.ஓ., சிவப்பிரகாஷ் வரவில்லை. அவர், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் நந்தகோபால் கூட்டத்தை நடத்தினார். முந்தைய குறைகேட்பு கூட்டத்தில் விவசாய அமைப்பினரால் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது துறைசார்ந்த அரசு அலுவலர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டது. விவசாயிகள், விவசாய அமைப்பினரின் பெரும்பாலான மனுக்களுக்கு, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பதில் கூட அளிக்காதது தெரியவந்தது. மனுக்களின் நிலை குறித்து பதிலளிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், கூட்ட அரங்கில் இல்லை.

எங்கே போனார்கள்?

நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பெரும்பாலான அரசு அலுவலர்கள் பங்கேற்கவில்லை. 46 துறை சார்ந்தோர் பங்கேற்கவேண்டிய நிலையில், வெறும் 11 துறை அலுவலர்கள் மட்டுமே வந்திருந்தனர். விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டத்தில், வேளாண் துறை அதிகாரிகளே பங்கேற்கவில்லை. பி.டி.ஓ., அலுவலகங்களிலிருந்து ஒருவர் கூட வரவில்லை. வெறும் சம்பிரதாய சடங்காகவே நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் இம்மாதம் நடைபெற வேண்டிய குறைகேட்புக்கூட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்தக் கூட்டமும் ஒப்புக்கு நடத்தப்பட்டது, விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியது.

மொபைல்போனில் மூழ்கிய அலுவலர்கள்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், 35 அரசு அலுவலர்கள் பங்கேற்காதது ஒருபுறமிருக்க, பங்கேற்றவர்களின் சிலர், மொபைல்போனில் மூழ்கியிருந்தனர். குறிப்பாக, கூட்ட அரங்கில் பின்வரிசையில் அமர்ந்திருத்த நீர்வளத்துறை அலுவலர் ஒருவர், மொபைல்போனில் 'கேன்டி கிரஷ் கேம்' விளையாடிக்கொண்டிருந்தார். கால்நடைத்துறை அலுவலர் ஒருவரோ, கூட்டம் துவங்கியது முதல், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆன்லைனில் செஸ் விளையாடிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் தாங்கள் முன்வைக்கும் பிரச்னைகளை செவிகொடுத்தும் கேட்காமல், விளையாட்டில் மூழ்கும் இதுபோன்ற அரசு அலுவலர்களால், தங்கள் பிரச்னைக்கு எப்படி தீர்வு காணமுடியும் என விவசாயிகள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gajageswari
அக் 31, 2025 17:22

விவசாயம் மட்டும் செய்யும் விவசாயிகள், விவசாயத்தின் பிரச்சினை பற்றி பேசினால் மட்டுமே அதற்கு மதிப்பு இருக்கும். இல்லை என்றால் இப்படித்தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை