சரிகிறது நிலத்தடி நீர் போர்வெல் பணி சுறுசுறு
பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பாக பெய்ய வேண்டிய பருவமழை இன்னும் கிடைக்கவில்லை. மிகவும் குறைவான மழை பெய்ததால் நிலத்தில் ஈரப்பதம் குறைந்து நிலம் வறண்டு கிடக்கிறது. மானாவாரியில் சாகுபடி செய்த பயிர்கள் கருகி வருகின்றன. பெரும்பாலான விவசாயிகள் தென்னை, வாழை, மா உள்ளிட்ட நீண்டகால பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மழை ஏமாற்றம் தந்ததால் தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, போர்வெல் மோட்டார்களை முழுவீச்சில் இயக்கி வருகின்றனர். பல்வேறு ஊராட்சிகள் குடிநீருக்காக நிலத்தடி நீரையே நம்பி உள்ளன. குடிநீர் மோட்டார்களும் இரவு பகலாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. கடந்த மாதம் செய்த மழையால் சிறிதளவு உயர்ந்திருந்த நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் கீழே சரியத் துவங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் வேறு வழியின்றி புதிதாக ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஒரு மாதமாக ஓய்ந்திருந்த 'போர்வெல்' வண்டி சத்தம் மீண்டும் கேட்கத் துவங்கி உள்ளது.