அரசு கேபிள் ஆபரேட்டருக்கு எச்.டி., பாக்ஸ் வினியோகம்
திருப்பூர்; அரசு கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வினியோகம் நேற்று துவங்கியது.திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் இணைப்புகளுக்கு வழங்குவதற்காக 6 ஆயிரம் எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளன. அவை, கலெக்டர் அலுவலக முதல் தளத்திலுள்ள அரசு கேபிள் டிவி அலுவலக அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.தனியார் நிறுவனங்களைவிட குறைந்த கட்டணம், துல்லியமான பட காட்சி மற்றும் எச்.டி.எம்.ஐ., கேபிள் மூலம் அனைத்து புதிய மாடல் 'டிவி'க்களிலும் இணைக்கும் வசதி காரணமாக, பழைய எஸ்.டி., பாக்ஸிற்கு பதிலாக, எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர்.இதை உணர்ந்து, அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், கட்டணம் செலுத்தி, எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை பதிவு செய்ய துவங்கியுள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த ஆபரேட்டர்களுக்கு எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி, நேற்றுமுதல் துவங்கிஉள்ளது.அரசு கேபிள் டிவி தாசில்தார் முரளி, திருப்பூர் மற்றும் அவிநாசி பகுதி டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர்கள் மற்றும் கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களுக்கு, எச்.டி., செட்டாப் பாக்ஸ்களை பெற்றுச்சென்றனர். ஆபரேட்டர்கள் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கேபிள் 'டிவி' இணைப்பு களுக்கு, எச்.டி., செட்டாப் பாக்ஸ்கள் பொருத்தப்பட உள்ளன.எச்.டி., பாக்ஸ் தேவைப்படும் ஆபரேட்டர்கள், https://www.tactv.inஎன்ற தளத்தில், கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.