குறுமையப் போட்டிக்கே செல்லாதவர் மாநில கபடி அணியில் இடம் பிடித்தார்
பாலமுருகன் மணிகண்டன், காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், கல்லுாரியில் பி.காம்., (பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ்) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.பள்ளி அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று, ஆர்வமாக இருந்தும், வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். கல்லுாரியில் இணைந்தவுடன் அண்ணா பல்கலை கபடி வீரரும், மாநில முதல்வர் கோப்பை பயிற்சியாளருமான பிரதீப்கமல் தக்க ஆலோசனை, பயிற்சிகளை வழங்கினார். அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட பாலமுருகன் மணிகண்டன். தற்போது 'யுவாசீரியஸ்' கபடி போட்டியில் பங்கேற்று, மாநில ஜூனியர் கபடி அணி வீரராகியுள்ளார். மைதானமே கதி
பாலமுருகன் மணிகண்டன் கூறியதாவது:பள்ளியில் படிக்கும் போது, திருச்சியில் மாவட்ட கபடி போட்டியில் பங்கேற்க ஏங்கினேன்; வாய்ப்பு கிடைக்கவில்லை. கல்லுாரி அணியில் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றதால், திருச்சியில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையிலேயான கபடி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.'டிபென்டிங்' (எதிரணி வீரரை பிடிப்பது) திறமையால், பாரதியார் பல்கலை கபடி போட்டிக்கு தேர்வாக முடிந்தது. பல்கலை போட்டி சவால் மிகுந்ததாக இருந்தது. எப்படி பயிற்சி எடுத்தால், விளையாட முடியும் என்பதையெல்லாம் பல்கலை போட்டி கற்றுக்கொடுத்தது. பாயின்ட் அள்ளினேன்
செங்கல்பட்டில் நடந்த, ஜூனியர் ஸ்டேட் சாம்பியன்ஷிப்பில் எங்கள் கல்லுாரி அணி வெற்றி பெற அதிக பாயின்ட்களை எடுத்துக் கொடுத்தேன். மாநில முதல்வர் கோப்பைக்காக சென்னையில் கபடி ஆடியதை பார்த்த, திருப்பூர் ஜெயசித்ரா கிளப் அணி, என்னை அவர்கள் அணிக்கு தேர்வு செய்து கொண்டது.தமிழகம் முழுவதில் இருந்து தலைசிறந்த, அணிகள் பங்கேற்ற,'யுவா கபடி சீரியஸ்' போட்டி சென்னை வேலம்மாள் கல்லுாரியில் நடந்தது. ஜெயசித்ரா கிளப் அணி சார்பில் பங்கேற்றேன்; எங்கள் அணி கோப்பையை வென்று பாராட்டு பெற்றது.எனக்குள் இருந்த கபடி ஆர்வம், வேகத்துக்கு ஊக்கம் தந்து, ஒவ்வொரு நாளும் என்னை தயார்படுத்தியவர், பயிற்சியாளர் பிரதீப்கமல். கஷ்டப்பட்டு கொண்டே இரு; நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என ஊக்கப்படுத்தினார். விளையாட்டில் நேர்மையாக இருந்ததால் தான் என்னால் இந்நிலைக்கு வர முடிந்தது. புரோ கபடி அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்பதே இலக்கு. இவ்வாறு, பாலமுருகன் மணிகண்டன் கூறினார்.