உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்ணோடு... மண்ணாகும் குடியிருப்பு; வீட்டு வசதி வாரியம் அலட்சியம்

மண்ணோடு... மண்ணாகும் குடியிருப்பு; வீட்டு வசதி வாரியம் அலட்சியம்

உடுமலை; உடுமலை அருகே மருள்பட்டியில், 1994ல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300 வீடுகள் கட்டப்பட்டது.ஏ, பி, சி, என 3 பிரிவுகளில், வீடுகள் கட்டப்பட்டு, ஏலம் விடப்பட்டது. நகரில் இருந்து தள்ளியும், போதிய வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், வீடுகள் ஏலம் போகவில்லை.சில ஆண்டுகளில், வீடுகளில் இருந்த இரும்பு பொருட்கள், கதவு, ஜன்னல் என அனைத்து பொருட்களும், திருடு போனது. மேல்நிலைத்தொட்டி மற்றும் இதர கட்டமைப்புகளில் இருந்து இரும்பு பொருட்கள் மாயமானது.நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பதால், வீடுகள் அனைத்தும் படிப்படியாக இடிய துவங்கியது. அடிப்படை பராமரிப்பு பணிகளை செய்து மறு ஏலம் விடவும் கோரிக்கை எழுந்தது.ஆனால், வீட்டு வசதி வாரியத்தினர் கண்டுகொள்ளாததால், 300 வீடுகளும் மண்ணோடு, மண்ணாகி வருகிறது. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி, சமூக விரோத செயல்களின் மையமாகி விட்டது.அவ்வழியாக செல்லவே, அருகிலுள்ள கிராம மக்கள் அச்சப்படும் நிலைக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மாறி விட்டது.நிரந்தர தீர்வாக வீடுகளை இடித்து விட்டு, மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியும் பலனில்லை.இதே நிலை நீடித்தால் வீட்டின் சுவர்களும் இடிக்கப்பட்டு, அப்பகுதியிலுள்ள மண்ணும் கடத்தப்படும் அவலம் ஏற்படும். ரூ. 5 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட குடியிருப்பு, சீமை கருவேல மரக்காடாக காட்சியளிப்பது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !