ஆவரேஜ் மாணவர் அரசு அலுவலர் ஆனது எப்படி?
ப ள்ளியில் பயிலும் அனைத்து மாணவரும், முதல் மதிப்பெண் பெறலாம் என்ற ஆசை இருந்தாலும், ஒருவர் மட்டுமே அந்த இலக்கை அடைய முடிகிறது. 'ஆவரேஜ் ஸ்டூடண்ட்ஸ்' எனப்படும் சராசரி மாணவர்களும், சரியான முயற்சி எடுத்தால், வெற்றியின் சிகரத்தை எட்டலாம் என்று நிரூபித்திருக்கிறார், திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஜெயராஜ். பள்ளியில் 6 மற்றும் 10 ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத இவர், தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியால், இன்று 'குரூப்-2' தேர்வில் வெற்றி பெற்று, புதுக்கோட்டை மாவட்டத்தில், வனவராக பொறுப்பேற்றிருக்கிறார். தனது வெற்றிப்பயணம் குறித்த அனுபவங்களை, ஜெயராஜ் நம்முடன் பகிர்ந்து கொண்டார்... அப்பா, 'பாய்லர்' மேன் வேலை பார்க்கிறார். அம்மா, நுாறு நாள் திட்ட தொழிலாளி. அண்ணன், படிப்பை தொடரவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, அரசு பள்ளியில் படித்த நான் தான், குடும்பத்தில் முதல் பட்டதாரி. எனது தங்கை, என்னை பின்தொடர்ந்து, போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகிறார். பள்ளியில் படிக்கும் போதெல்லாம், 'லாஸ்ட் பெஞ்ச்' மாணவன் தான். மிகவும் பின்தங்கியிருந்த நிலையில், சிக்கண்ணா கல்லுாரியில், பி.எஸ்.சி., (விலங்கியல்) படித்தேன். புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லுாரியில், பி.எட்., பாரதியார் பல்கலையில், எம்.எஸ்.சி., முடித்தேன். எம்.எட்., முடித்த பின், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாரானேன். அப்போது தான், 'ஆசிரியர் தகுதி தேர்வு, எப்போதாவது ஒருமுறை நடக்கிறது. போட்டித்தேர்வு, அடிக்கடி நடக்கிறது. 'நீ ஏன் அதை ட்ரை பண்ணக்கூடாது,' என்று எனது நண்பர்கள் கூறினர். அதன்படியே, பழைய கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் அமர்ந்து, சுயமாக படிக்க துவங்கினேன். அதுவும், 2019 கொரோனாவுக்கு பின்னரே எனது முயற்சி துவங்கியது. வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் வழிகாட்டுதல், நஞ்சப்பா பள்ளி நுாலக புத்தக துணையுடன் எனது முயற்சிகளை துவக்கினேன். இதுவரை, மூன்றுமுறை, குரூப் -1 தேர்வு எழுதியிருக்கிறேன். இரண்டு முறை, குரூப் - 2 மற்றும் குரூப் - 4 தேர்வு எழுதினேன். சந்தோஷமாக இருந்தாலும் படிப்பேன். துக்கமாக இருந்தாலும் படிப்பேன். கடந்தாண்டு நடந்த குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற்று, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வனச்சரகத்தில், வனவராக பதவியேற்றுள்ளேன். 'நாம் தோற்றுவிட்டோம்' என்ற எண்ணம் எங்கும் வரக்கூடாது; தளர்ந்துவிடக்கூடாது. இதற்கு முன், இரண்டு தேர்வுகளில் வென்று, பணி நியமன ஆணை பெற்றிருக்கிறேன். தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் வென்று, 2022ல், மீன்வளத்துறை உதவி ஆய்வாளராக பணியானை பெற்றேன். கடந்த, 2024ல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உதவி மேலாளர் பணியையும் பெற்றேன். குருப் -2 தேர்வு முடிவும் வெளியானதால், பணியில் சேரவில்லை; தற்போது வனவராக பொறுப்பேற்றுள்ளேன். தற்போது நடந்த 'குரூப்-1, 'குரூப் -1 ஏ' பூர்வாங்க தேர்வுகளில், வெற்றி பெற்றுள்ளேன். பிரதான தேர்வை எழுதி, வனத்துறையில் உயர் பதவியை அடைவது லட்சியம். பள்ளி அளவில் 'ஆவரேஜ்' மாணவராக இருந்தாலும், கல்லுாரி படிப்பிலும், அதன்பின், போட்டித்தேர்வுகளுக்கு முழு அளவில் தயாரானால், உயர்ந்த அரசு பதவிகளை அலங்கரிக்க முடியும். இவ்வாறு தன்னம்பிக்கை ததும்பும் வார்த்தைகளுடன் பேசிய ஜெயராஜை வாழ்த்தி விடைபெற்றோம். சந்தோஷமாக இருந்தாலும் படிப்பேன். துக்கமாக இருந்தாலும் படிப்பேன். எக்காரணத்துக்காகவும், படிப்பதை நான் நிறுத்தவில்லை. விடா முயற்சி, தன்னம்பிக்கையுடன் படித்தேன்