சும்மா கிடக்கும் அம்மா பூங்காக்கள் விஷ ஜந்துகள் குடியிருப்பாக மாறின
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காக்கள் பராமரிப்பின்றி, புதர்மண்டிக் கிடக்கின்றன. கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் அவற்றை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தொழில்கள் நிரம்பியிருக்கும் திருப்பூரில், நகர மற்றும் கிராமப்புற மக்களுக்கான பொழுதுபோக்கு என்பது, சினிமா தியேட்டர்களும், மால்களும் தான். சமீபத்தில், சுற்றுலா துறை சார்பில், ஆண்டிபாளையத்தில் படகு சவாரி விடப்பட்டுள்ளது. இவையனைத்தும் தினசரி பொழுது போக்காக இருந்து விடப்போவதில்லை.கிராமப்புறங்களில் பள்ளிக் குழந்தைகள் விளையாடி மகிழவும், அதன் வாயிலாக தங்கள் உடல்நலன், மனதை வலுப்படுத்திக் கொள்ளவும், அரசு சார்பில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, கிராம ஊராட்சிகளில் உள்ள ரிசர்வ் சைட்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் சில ஊராட்சிகளில், 'அம்மா பூங்கா' அமைக்கப்பட்டது. சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள தளம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. மேலும், விலையுயர்ந்த உடற்பயிற்சி சாதனங்களை உள்ளடக்கிய, இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக்கூடமும் அமைக்கப்பட்டன.பராமரிப்பு இன்றிபுதர் மண்டினஇருப்பினும், இவற்றை பராமரிக்க, சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு என்பது, துவக்கம் முதலே இல்லை என்ற நிலையில், ஊராட்சி தலைவர்கள் தங்களின் சொந்த முயற்சியில், பராமரித்து வந்தனர். தற்போது, அவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது.இதனால், அம்மா பூங்கா மற்றும் ரிசர்வ் சைட்டுகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பராமரிப்பு இல்லாமல், புதர்மண்டி கிடக்கின்றன. விஷ ஜந்துகளின் குடியிருப்பாகவும் மாறியுள்ளன. அவிநாசி கருமாபாளையம் பகுதியில் அமைக்கப்பட்ட பூங்கா, இதற்கு சாட்சியாக உள்ளது. புதர்மண்டி கிடக்கும் பூங்காவில், உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்கள் களவு போயிருக்கிறது.தரைதட்டிய நீர்நிலைகள்மைதானமாக மாறினபல்வேறு ஊராட்சிகளில், கடந்த தி.மு.க., ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் கூட தற்போது, பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கின்றன. இதனால், ஊரக பகுதிகளில் உள்ள சிறுவர்கள் தரைதட்டி கிடக்கும் குளம், குட்டைகளிலும், வானம் பார்த்துள்ள விவசாய நிலங்களையும் தான், விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர்.----அவிநாசி கருமாபாளையத்தில் புதர்மண்டிக் காணப்படும் அம்மா பூங்கா.உடற்பயிற்சி சாதனங்களும் களவு போயுள்ளன.
இடம் உண்டு... நிதி இல்லை
பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் பூங்கா அமைப்பதற்கான இடம் இருக்கிறது; ஆனால், பூங்கா அமைக்க, அதை பராமரிக்க நிதி ஒதுக்கீடு இல்லை. இதனால், அதைப்பற்றி ஊராட்சி நிர்வாகங்களும் கவலைப்படுவதில்லை. கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கிராம ஊராட்சிகளில் உள்ள பூங்காக்களை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.