உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்; சூனியம் வைக்கும் சூதாட்ட கிளப்கள்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்; சூனியம் வைக்கும் சூதாட்ட கிளப்கள்

திருப்பூர்; சமீபத்தில், திருப்பூர், அவிநாசி ரோட்டிலுள்ள 'கிளப்' ஒன்றில் நடந்த சீட்டாட்ட வீடியோ வெளியானதையடுத்து, பல்வேறு கிளப்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். ஒரு கிளப்பில், ஆறு பேர் கைது செய்யப்பட்டு, 40 ஆயிரம் ரூபாயும்; மற்றொரு கிளப்பில் மேலாளர் மட்டும் கைது செய்யப்பட்டு, 3.29 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.லட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட கிளப்பில், வண்ணத்தில் எண் பொறிக்கப்பட்ட ஏராளமான டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணம் கட்டினால் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதும், பின் வெற்றி பெற்ற பின், பெறப்பட்ட டோக்கன் 'பாயின்ட்' அடிப்படையில் லட்சங்களில் பணத்தை திரும்ப பெறுவதும் தெரிந்தது. பணத்தை எண்ணும் இயந்திரமும் இருந்தது; லட்சத்தில் பணம் புழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'லகர'ங்களில் 'பெட்டிங்'

தற்போது சிக்கலில் சிக்கியுள்ள கிளப்பில் நிரந்தர உறுப்பினராக, 2.5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இத்தொகை கிளப்புக்கு கிளப் மாறுபடும். மாதத்துக்கு குறிப்பிட்ட சில ஆயிரம் ரூபாய் மட்டும் கட்ட வேண்டும். தரைத்தளத்தில், ஐந்து டேபிளுடன், முதல் தளத்தில், ஏழு டேபிளுடன் சீட்டாட்டம் நடந்துள்ளது. தரைத்தளத்தில் சில ஆயிரங்களில் மட்டும் கட்டி விளையாடுகின்றனர். மேல் தளத்தில், லட்சக்கணக்கில் பணம் கட்டப்பட்டு விளையாடப்படுகிறது.

'ஏகே - 47' என்றால் என்ன?

டோக்கன்களுக்கு எண் வழங்கப்படும். 'நாக் அவுட்' முறையில், ஒரே முறை, 20 ஆயிரம் ரூபாய் கட்டப்படுகிறது. இதில், பெரிய தொகையுடன் கூடிய பெட்டிங் 'ஏகே - 47' என்று அழைக்கப்படுகிறது. இதில், ஒரு ரவுண்ட் என்பது, லட்சம் ரூபாய்க்கு மேல் வரும். விடுமுறை நாட்களில், டோக்கனுக்கான தொகை அனைத்தும், இரட்டிப்பாக மாறி விடுகிறது.

காவு வாங்கப்பட்ட உயிர்கள்

பெருந்தொகையை இழக்கும் நபர்களில் சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துஇருக்கின்றன.

பரிசுகளுடன் கவர்ந்திழுப்பு

ஒவ்வொரு மாதத்திலும், 1ம் தேதி முதல், 30ம் தேதி வரை வெற்றி பெறுபவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்கின்றனர். இதை அடுத்த மாதத்தில், அவர்களுக்கு, அந்த தொகையில் இருந்து ஏதாவது பரிசுகளை கொடுத்து கவர்கின்றனர். போலீசார் சோதனையில் சிக்கிய தொகை கூட, இதற்காக, எடுத்து வைக்கப்பட்ட பணம் தான் என்று கூறப்படுகிறது.சில நாட்களாக போலீசாரின் கெடுபிடி அதிகம் இருந்ததால், 'கிளப்'களில், தற்காலிகமாக சில வாரங்கள் சீட்டாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி ரோட்டில், மாநகரம், புறநகர் பகுதியில் இயங்கி வந்த கிளப்பில், சில மாதங்கள் முன், போலீசார் நடவடிக்கையால் மூடப்பட்டது. தற்போது, மீண்டும் அதே ரோட்டில் உள்ள ஒரு கட்டடத்தின் கீழ்தளத்தில் சீட்டாட்டம் நடந்து வருகிறது.'சூதாட்ட கிளப்'களை ஒழிக்க, கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அதிரடி காட்ட வேண்டும்.''உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்நிழலும்கூட மிதிக்கும்''இதுதான், சூதாட்டத்தில், சொத்துகளை இழந்தவர்கள் நிலைமை.

ரூ1.5 கோடி இழந்த நபர்

திருப்பூரை சேர்ந்த ஒருவர், சீட்டாட்ட கிளப்புக்கு அன்றாடம் சென்று வந்தார். முதலில், சில ஆயிரங்களில் ஆரம்பித்த அவர், வெற்றியை கண்டு, மேலும், மேலும் பணத்தை கட்ட ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்து லட்சங்களில் பணத்தை இழக்க ஆரம்பித்த அவர், 1.5 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். முதலில் தன்னிடம் இருந்த பணத்தை கட்ட ஆரம்பித்து, இறுதியில் கடனாளியாக மாறி, வெளியில் தலை காட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

சட்டப்படி நடவடிக்கை

மாநகரில் உள்ள கிளப்களில் சூதாட்டம் நடக்கிறதா என்று போலீசார் கண்காணிக்கின்றனர். சந்தேகப்படும் இடத்தில் திடீர் சோதனையும் செய்கின்றனர். சில நாட்கள் முன், இதற்கு முன் சோதனை செய்யப்பட்டு பணம் பறிமுதல் செய்த இடங்களில், 'கிளப்' மீது, சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.- ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர்

விடுமுறை நாளில் விடிய விடிய சூதாட்டம்

திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், பொழுதுபோக்கு என்ற பெயரில் செயல்படும் சில கிளப்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களில், சத்தமின்றி சூதாட்டம் நடக்கிறது. மது விற்பனையுடன் அன்றாடம் லட்சக்கணக்கான ரூபாய் புழங்கி வருகிறது. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், இரு மடங்கு பணத்துடன் விடிய விடிய சூதாட்டம் நடக்கிறது. கிளப்பில் உறுப்பினர்களாக உள்ள நபர், நகரின் வி.ஐ.பி.,கள், அரசியல் கட்சியினராக உள்ளதால், வெளியில் தெரிவதில்லை. நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தயங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ