உடுமலை;உடுமலை அரசு மருத்துவமனையில், பல் சிகிச்சைப்பிரிவின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, வ.உ.சி., வீதியில், பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுடன் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. நகர் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும், சிகிச்சைக்காக, இம்மருத்துவமனைக்கே வந்து செல்கின்றனர்.தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாவும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், பல் சிகிச்சைப்பிரிவு, மேம்படுத்தப்படாமல் உள்ளது.இப்பிரிவுக்கு, அதிகப்படியான நோயாளிகள், சிகிச்சைக்காக, வந்து செல்லும் நிலையில், ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். பல் தொடர்பான பாதிப்பை கண்டறியும் 'எக்ஸ்ரே' கருவி என, எந்தவொரு கட்டமைப்பு வசதியும் கிடையாது.இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 'பல்' வலிக்கு மாத்திரை மட்டுமே வாங்கிச்செல்கின்றனர். கட்டமைப்பை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நோயாளிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனை பல் சிகிச்சைப்பிரிவில், பல் எடுத்தல், மாத்திரை வழங்குதல் ஆகிய பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. பல் கட்டுதல், பல் சீரமைப்பு, ஈறுநோய் உள்ளிட்ட நோய்களை பரிசோதித்து, அதற்குரிய சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை.நீண்ட நேரம் காத்திருந்தும் உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்காமல், ஏமாற்றமே மிஞ்சுகிறது. பல்லுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.