இனாம் நில விவகாரம்; கிராம மக்கள் கொந்தளிப்பு
திருப்பூர்;இனாம் நிலங்களை பூஜ்ஜிய மதிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரைப்புதுார் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில், இனாம் நிலங்களை, ஹிந்து அறநிலையத்துறையும், வக்பு வாரியமும் தங்களுக்கு சொந்தமான நிலம் என கூறி, பூஜ்ஜிய மதிப்பு செய்ய, பத்திரப்பதிவுத்துறைக்கு கடிதம் அளித்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் தாலுகா, கரைப்புதுார் கிராமத்தில், 650 ஏக்கர் இனாம் நிலங்கள் பூஜ்ஜிய மதிப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கி பேசியதாவது: ''கரைப்புதுார் கிராமத்தில், நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக நில அனுபவ உரிமையும், பதிவு செய்யப்பட்ட கிரய பத்திரம், பட்டா பெற்ற பின்னரும், இனாம் ஒழிப்பு சட்டத்தில், நிலங்கள் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுபோல, அரசே நிலங்களை அபகரிக்கும் கொடுஞ்செயல் எங்கும் நடைபெறவில்லை. சட்டவிரோதமாக, ஹிந்து அறநிலையத்துறை பத்திரப்பதிவுத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தை ரத்து செய்யவேண்டும். குஜராத், கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகள், நில உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, மீண்டும் நில உரிமை வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை போல், தமிழக அரசும் நில உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஈசன் முருகசாமி பேசினார். கரைப்புதுார் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போலீசுடன் வாக்குவாதம்நுாற்றுக்கும் மேற்பட்டோர், மனு அளிக்க கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கினுள் செல்ல முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், பொதுமக்கள், விவசாயிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், 20 பேர் மட்டும் அரங்கினுள் சென்று, இனாம் நிலங்கள் மீதான பத்திரப்பதிவு தடையை நீக்க கலெக்டரிடம் மனு அளித்தனர்.