உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியர் பெயரில் ஊக்கத்தொகை முன்னாள் மாணவரின் அறப்பணி

ஆசிரியர் பெயரில் ஊக்கத்தொகை முன்னாள் மாணவரின் அறப்பணி

ப ல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1980ம் ஆண்டு காலகட்டத்தில் படித்தவர் சிவக்குமார். தற்போது, அமெரிக்காவில் பணியாற்றியபடி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். தான் படித்த பள்ளியையும், தனக்கு கற்பித்த ஆசிரியரையும் மறக்காத சிவக்குமார், தனது முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சுப்பிரமணியம் நினைவாக, ஏ.என்.எஸ்., நினைவு பரிசு என்ற பெயரில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மாணவி அக் ஷயாவுக்கு, 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சிவகுமாரின் நண்பர் சாகுல் அமீது மூலம் ஊக்கத்தொகை வழங்கப்பட, தலைமை ஆசிரியர் ப்ரைசி கவிதா, உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகுமார் நண்பர் சாகுல் அமீது கூறியதாவது: சேடபாளையத்தை சேர்ந்த சிவகுமார், தான் படித்த காலகட்டத்தில், குடும்பத்தில், போதிய வசதி வாய்ப்புகள் இன்றி சிரமப்பட்டு வந்தபோது, சுப்பிரமணியம் ஆசிரியர்தான் அவருக்கு மிகவும் உதவினார். அவரால் உயர்கல்வியும் முடித்த சிவகுமார், தற்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். தான், இந்த நிலையில் உயர்ந்ததற்கு காரணம், சுப்பிரமணியம் ஆசிரியர் தான் என்பதை மறக்காத சிவக்குமார், அவர் காலமான பின்னரும், அவரது நினைவாக, ஆண்டுதோறும், தான் படித்த பள்ளியில் முதலிடம் பெரும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தான் படித்த பள்ளியையும், கற்பித்த ஆசிரியரையும் மறக்காமல், சிவக்குமார் உதவி வருவது நெகிழச் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை