உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொரியல் தட்டை விலை அதிகரிப்பு: வரத்து குறைவால் ஏற்பட்ட மாற்றம்

பொரியல் தட்டை விலை அதிகரிப்பு: வரத்து குறைவால் ஏற்பட்ட மாற்றம்

உடுமலை: உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு சிறு, குறு விவசாயிகள், பொரியல் தட்டை சாகுபடியில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். அதிக செலவு பிடிக்காத இச்சாகுபடியில், விளையும் பொரியல்தட்டை பெரும்பாலும் கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அம்மாநில வியாபாரிகள் நேரடியாகவும், உடுமலை சந்தைகளிலும், பொரியல்தட்டையை கொள்முதல் செய்து செல்கின்றனர். நடப்பு சீசனில் தொடர் மழை காரணமாக, சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டு, மகசூல் குறைந்துள்ளது. அதேவேளையில், கேரளாவில் தேவை கூடுதலாகியுள்ளது. இதனால், கிராக்கி ஏற்பட்டு, பொரியல் தட்டை விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை, கிலோவுக்கு 10-12 ரூபாய் மட்டுமே விலை கிடைத்து வந்தது. நேற்றைய நிலவரப்படி, கிலோவுக்கு, 30 ரூபாய் வரை விலை கிடைத்தது. விவசாயிகள் கூறுகையில், 'குறைந்த தண்ணீர் தேவையுள்ளதால், குறிப்பிட்ட இடைவெளியில் பொரியல் தட்டை நடவு செய்கிறோம். நடவு செய்து, 50 நாட்களுக்கு பிறகு, அறுவடையை துவக்கலாம். நாள்தோறும் ஏக்கருக்கு, 150 கிலோ வரை அறுவடை செய்ய முடிகிறது. அறுவடைப்பணிகளுக்கு ஆட்கள் தேவை இருப்பதால், குறைந்த பரப்பளவிலேயே இச்சாகுபடியை மேற்கொண்டு வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி