உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டி சுமை குறைந்தால் வளமாகும் தொழில்கள்

வட்டி சுமை குறைந்தால் வளமாகும் தொழில்கள்

''ஐந்து ஆண்டுகளுக்கு பின், 'ரெப்போ ரேட்' குறைந்து வரும் நிலையில், அதற்கேற்ப பல்வகை கடன் மீதான வட்டியை குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும்'' என்பது திருப்பூர் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.மத்திய ரிசர்வ் வங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, நிதிசார்ந்த கொள்கையை வெளியிடுகிறது. அதில், ரிசர்வ் வங்கி மூலம், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு வங்கியும், கடன் மீதான வட்டியை முடிவு செய்கின்றனர்.வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி தற்காலிகமாக பெறும் கடனுக்கான வட்டி, 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்' என்ற பெயரில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு பிறகு, ஐந்து ஆண்டுகளாக, 'ரெப்போ ரேட்' குறையவே இல்லை. மாறாக, பல முறை, தொடர்ச்சியாக அதிகரித்துவிட்டது.பணவீக்கம் அதிகரிக்கும் போது, 'ரெப்போ ரேட்' அதிகப்படுத்துவதன் மூலம் சமன்செய்யப்படுகிறது.

'ரெப்போ ரேட்' குறைப்பு

நடைமுறையில் இருந்த, 6.50 சதவீத 'ரெப்போ ரேட்', தற்போது, 5.50 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த 2001 டிச., மாதம், 4 சதவீதமாக இருந்தது; 2022 ஆக., மாதம், 5.40 சதவீதமாக அதிகரித்தது; 2022 டிச., மாதம், 6.20 சதவீதமாக உயர்ந்தது. 2023 மற்றும் 2024 டிச., மாதம் 6.50 சதவீதமாக தொடர்ந்தது. பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, 2025 பிப்., மாதம், 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.தொடர்ந்து, ஏப்., மாதம், 6 சதவீதமாகவும், கடந்த 6ம் தேதி, 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டது. 'ரெப்போ ரேட்' விகிதம் குறையும் போது, வங்கிகள் பல்வகை கடன்கள் மீதான வட்டியை குறைக்க வேண்டும். இருப்பினும், உடனுக்குடன் குறைக்காமல், காலம் கடத்துவது தொடர்கிறது.

வங்கிக்கடனே துணை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் என, எவ்வகை உற்பத்தியாளர்களும் சரி, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும் சரி, வங்கிக்கடன் அடிப்படையில் இயங்குகின்றன.ஒவ்வொரு ஏற்றுமதி ஆர்டர்களும், வங்கிக்கடன் மீது இயங்குகிறது. வங்கிகள், வாடிக்கையாளரின் நீண்ட நாளைய வரவு -செலவு உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில், வட்டியை நிர்ணயம் செய்கின்றன.அதன்படி, குறுகிய கால தொழிற்கடன் மீதான வட்டி, 8 முதல் 10 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் மட்டும், 12 சதவீதம் வரை வட்டி நிர்ணயித்துள்ளது.கடந்த ஐந்து மாதங்களாக, 'ரெப்போ ரேட்' குறைக்கப்படுவதால், வங்கிக்கடன் மீதான வட்டியும் குறைக்கப்பட வேண்டும். அதாவது, மூன்று கட்டமாக வட்டி குறைப்பு நடந்துள்ளதால், கடன் மீதான வட்டி சுமை குறையுமென தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !