உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், பத்து படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளதால், இனி அவசர சிகிச்சைக்கு கோவை மற்றும் ஈரோட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை இருக்காது.திருப்பூரில் உள்ள இ.எஸ்.ஐ., நவீன சமையல் கூடம், மத்திய பரிசோதனை கூடம், நவீன பல் மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி துவக்க விழா நடந்தது.எம்.பி., சுப்பராயன் தலைமை வகித்தார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் உமாமகேஷ்வரி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின், எம்.எல்.ஏ., விஜயகுமார் புதியதாக துவங்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று இதன் மூலம் என்னென்ன பயன் நோயாளிகளுக்கு கிடைக்கும் என கேட்டறிந்தார். நிகழ்ச்சி துவங்கும் முன் எம்.பி., ஆய்வு மேற்கொண்டார்.இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:உள்நோயாளிகள் பிரிவில் இதுவரை, 65 படுக்கை இருந்தது. தற்போது, கூடுதலாக, 25 படுக்கை இணைக்கப்பட்டுள்ளதால், இனி, 90 பேர் தங்கி சிகிச்சை பெற முடியும். பல் மருத்துவ சிறப்பு பிரிவு இதுவரை இல்லை. நவீன பல் மருத்துவப்பிரிவு துவங்கப்பட்டுள்ளதால், இனி பல் சார்ந்த உயர்சிகிச்சைகளை இங்கேயே மேற்கொள்ள முடியும்.இதுவரை அவசர, தீவிர சிகிச்சை என்றால், நோயாளியை கோவை இ.எஸ்.ஐ., க்கு அனுப்ப வேண்டிய நிலை இருந்தது. தற்போது, பத்து படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதால், இங்கேயே சிகிச்சை பெற முடியும். நோயாளிகள் வருகை அதிகரிப்பதால், அதற்கேற்ற வசதிகளுக்காக உணவு தயாரிப்பு கூடம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.ரத்தப் பரிசோதனையின் பல நிலைகள், தைராய்டு, 'பயோ லைன்' உள்ளிட்ட குறிப்பிட்ட சில பரிசோதனை முடிவுகளை அறிய, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நோயாளிகளின் விபரங்களை அனுப்பி, ரிசல்ட் பெற்று வந்தோம். விரிவுபடுத்தப்பட்ட மத்திய பரிசோதனைக்கூடம் நிறுவப்பட்டுள்ளதால், முடிவுகளை இனி இங்கேயே அறிந்து கொள்ள முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை