ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு கொண்டம்பட்டியில் விசாரணை; நடவடிக்கை எடுக்க பரிந்துரை
உடுமலை; கொண்டம்பட்டி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நிதி இழப்பு ஏற்படுத்தி, முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூர் கலெக்டருக்கு, விசாரணை குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, அப்பகுதியை சேர்ந்த, ஜெயப்பிரகாஷ், முருகானந்தம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறை தீர்வாளர் (பொ) சுப்பிரமணியன், தலைமையிலான குழுவினர் ஊராட்சியில் நேரடியாக விசாரணை நடத்தினர். இதில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபரின் வேலை அட்டையை பயன்படுத்தி, 168 நாட்கள் அந்நபர், வேலை செய்ததாக போலி வருகை பதிவு செய்துள்ளனர். இதன் வாயிலாக, 45,422 ரூபாயை பணித்தள பொறுப்பாளர்கள் முறைகேடு செய்துள்ளனர். பணிக்கு வராத மாராள் என்பவரின் வேலை அட்டையை பயன்படுத்தி, 5 ஆண்டுகளில், 65, 219 ரூபாயும், ஜோதிமணி என்பவரது அட்டையை பயன்படுத்தி, இரு ஆண்டுகளில், 6,889 ரூபாயும் முறைகேடு செய்துள்ளனர். இவ்வாறு, நான்கு பிரிவுகளின் கீழ், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 5 ஆண்டுகளில், 1 லட்சத்து 22,810 ரூபாய் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி, விசாரணை குழுவினர் திருப்பூர் கலெக்டருக்கு அளித்துள்ள பரிந்துரைகள்: கொண்டம்பட்டி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நிதியிழப்பு ஏற்படுத்திய, பணித்தள பொறுப்பாளர்கள் கனகுலட்சுமி, சக்திபிரியா, சுமதி, மகேஸ்வரி ஆகியோரை திட்ட பணியில் இனி ஈடுபட அனுமதிக்கக்கூடாது. இழப்பு ஏற்பட்ட தொகை, 1 லட்சத்து 22 ஆயிரத்து 810 ரூபாயை இழப்பு ஏற்படுத்திய அனைவரிடம் வசூல் செய்து உரிய அரசுக்கணக்கில் திரும்ப செலுத்த வேண்டும். வேலைக்கு வராத மூன்று அட்டைதாரர்கள் மற்றும் வேலைக்கு வந்ததாக போலி வருகை பதிவு செய்யப்பட்ட நான்கு வேலை அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். நிதியிழப்பு மற்றும் தொடர்பான தவறான செயல்பாடுகளுக்கு, காரணமான அலுவலர்களிடம் உரிய விளக்கம் பெற வேண்டும். இவ்வாறு, பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.