திருப்பூர்:வெள்ள சேதத்தால், நல வாரிய விண்ணப்பப் பதிவு ஆவணங்கள் அழிந்துவிட்டதாக கூறுவதால், தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொழிலாளர் நலவாரியங்கள், சரிவர செயல்படுவதில்லை என, தொழிற்சங்கங்கள் கடுமையாக குற்றம்சாட்டி வந்தன. அதிகாரிகள், அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு தவறான தகவல்களை கொடுத்து, தொழிலாளர் நலவாரியம் குறித்த தகவல்களை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், 30 மாதங்களாக நலவாரிய செயல்பாடு சரியில்லை என, தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியள்ளன. நலவாரிய விண்ணப்ப பதிவுக்கு உரிய தீர்வு கிடைக்காமல் இருக்கும் நிலையில், சென்னை வெள்ள சேதத்தால், விண்ணப்ப ஆவணங்கள் முழுமையாக அழிந்துவிட்டதாக கூறுவதால், தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து, ஐ.என்.டி.யு.சி. திருப்பூர் மாவட்ட பொதுசெயலர் சிவசாமி கூறியதாவது:சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால், 70 லட்சம் தொழிலாளர் நலவாரிய பதிவு அழிந்துவிட்டதாக கூறுகின்றனர். அழிந்த கம்ப்யூட்டர் தகவல்களை, மீட்கவும் இயலவில்லை என்றும் கைவிரித்துவிட்டனர்.ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பட்டா உள்ளிட்ட பிற ஆவணங்கள் சரியாக இருக்கும்போது, நலவாரிய பதிவு மட்டும் எப்படி அழிந்தது என்று புரியவில்லை.நலவாரிய விண்ணப்ப பதிவுகள், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம், ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்படுகிறது. அங்கிருந்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே, மாவட்டம் தோறும் பதிவு செய்துள்ள, தொழிலாளர் நலவாரிய விண்ணப்ப பதிவுகளுக்கு, பலன்கள் கிடைக்கும்.தமிழக முதல்வர், ஒருமுறையாவது, தொழிலாளர் நலத்துறையை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். திருமணம், கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம், வீடு கட்டும் திட்டங்களில், எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை முதல்வர் ஆய்வு செய்தாலே போதும்; துறையின் செயல்பாடுகளை கண்டறிய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.