அணையில் செல்பிக்காக அத்துமீறல் நடவடிக்கை எடுப்பது அவசியம்
உடுமலை:அமராவதி அணை பகுதியில், அத்துமீறும் சுற்றுலா பயணியரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமைந்துள்ள அமராவதி அணை, சுற்றுலா தலமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், சுற்றுலா பயணியர், அணையின் மதகு பகுதிக்கும், நீர் தேக்கத்துக்கும் சென்று, 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, அணை நிரம்பி, மேல் மதகு, பிரதான கால்வாய் ஷட்டர், ஆற்று பாலம் உள்ளிட்ட இடங்களை ரசிக்க சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்களும், அமராவதி அணைப்பகுதியில், குவிகின்றனர். பலர் அத்துமீறி, அணை மதகு, கீழ் ஷட்டர், தடுப்பு சுவர் ஆகிய பகுதிகளுக்கு சென்று, 'செல்பி' எடுக்க செல்கின்றனர். சிலர் நீரோட்டம் அதிகமுள்ள ஆற்றில் இறங்கி, போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். அணைக்குள்ளும் நுழைந்தும் சிலர் படம் எடுக்கின்றனர். இத்தகைய விபரீத முயற்சிகளால், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், அணைப்பகுதியில், விழுந்து இளைஞர் உயிரிழந்தார். அதன் பிறகும், பலர் அத்துமீறலில், ஈடுபட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில், கண்காணிப்புக்கு, பணியாளர்கள் நியமித்து, அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.