உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இரு மாநில வன எல்லையில் கூட்டு ரோந்து; வனக்குற்றங்களை தடுக்க ஒருங்கிணைப்பு அவசியம்

இரு மாநில வன எல்லையில் கூட்டு ரோந்து; வனக்குற்றங்களை தடுக்க ஒருங்கிணைப்பு அவசியம்

உடுமலை; தமிழக - கேரளா எல்லை பகுதிகளில், இரு மாநில வனத்துறையினரும் கூட்டு ரோந்து சென்று வனக்குற்றங்களை தடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில், தமிழகம் - கேரளா மாநில வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இரு மாநில எல்லையில், கேரளா மாநிலத்தில் சின்னாறு வனப்பகுதியும், தமிழக எல்லையில், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. கேரளா மாநிலத்தில், சின்னாறு, மறையூர், மூணாறு பகுதிகளில் அதிகளவு சந்தன மரங்கள் உள்ளன. அதே போல், இரு மாநில வனப்பகுதியிலும் வன விலங்குகள் வேட்டை, கஞ்சா சாகுபடி என வனக்குற்றங்கள் அதிகளவு நடந்து வருகின்றன. இரு மாநில வன எல்லையில் வனக்குற்றங்களை தடுக்கும் வகையிலும், வனப்பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையிலும், இரு மாநில வனத்துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. மேலும், வன விலங்குகள் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு மற்றும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உடுமலை - மூணாறு ரோட்டில் ரோந்து, பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இரு மாநில வனத்துறையையும் ஒருங்கிணைக்கும் வகையில், மாநில எல்லையான சின்னாறு பகுதியில், இரு மாநில வனத்துறையினரும் பங்கேற்கும் கூட்டம் நடத்தி, வனப்பாதுகாப்பு, வனக்குற்றவாளிகள், நக்சல் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து, தகவல் பரிமாறிக்கொள்ளும் கூட்டம் நடந்து வந்தது. அதே போல், இவர்கள் இணைந்து, எல்லைப்பகுதிகளில், அடிக்கடி கூட்டு ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக, இந்த நடைமுறையை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், கேரளாவில் சந்தனக்கட்டை கடத்துதல், வன விலங்குகள் மர்மமான முறையில் இறப்பது, கஞ்சா சாகுபடி உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், கேரளாவிலிருந்து சந்தன கட்டை கடத்திய இருவர், தமிழக வனத்திற்குள் வந்து பதுங்கினர். ஒருவர் சிக்கிய நிலையில், மற்றொரு குற்றவாளி கிடைக்கவில்லை. எனவே, வனக்குற்றங்களை தடுத்து, வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இரு மாநில வனத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படவும், தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும், கூட்டு ரோந்து பணி மேற்கொள்ளவும் வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை