கார்த்திகை தீப திருவிழா; மண்விளக்கு விற்பனை தீவிரம்
உடுமலை; கார்த்திகை ஜோதியையொட்டி, உடுமலையில் மண் விளக்குகளின் விற்பனை களைகட்டியது.கார்த்திகை மாத முக்கிய நிகழ்வாக தீப திருவிழா கொண்டாப்படுகிறது. வீடுகளிலும், வணிக கடைகள் என அனைத்து பகுதிகளிலும் தீபம் ஏற்றி அனைவரும் கொண்டாடுகின்றனர். நாளை தீப திருவிழா துவங்குகிறது. மூன்று நாட்கள் வைப்பது ஐந்து நாட்கள், தவிர பலரும் கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றி வழிபடுகின்றனர். கோவில்களிலும் சொக்கப்பானை ஏற்றுதல், பக்தர்கள் விளக்குகளை வைத்து வழிபடுவதும் நடக்கிறது.கார்த்திகை ஜோதியையொட்டி உடுமலை சுற்றுப்பகுதிகளில் மண் விளக்குகளின் விற்பனையும் களைகட்டியுள்ளது. பஸ் ஸ்டாண்ட், சந்தை ரோடு, ராஜேந்திரா ரோடு பகுதிகளில் மண் விளக்குகள் விற்பனை நடக்கிறது.ஒரு ரூபாய்க்கு ஒரு விளக்கு என துவங்கி, அதிகப்பட்சமாக, 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. நடப்பாண்டில் புதிதாக பொம்மையின் கையில் விளக்கு, சிறிய பறவை கூட்டில் விளக்கு, சிறிய கண்ணாடி பொறுத்தப்பட்ட லாந்தர் விளக்குகளும் விற்பனை செய்யப்படுகிறது.உடுமலை ராஜேந்திரா ரோட்டில், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகள்.