உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதாரம் காப்பதில் விழிப்புணர்வு இல்லை; துாய்மை பணியாளர்களுக்கு இரட்டிப்பு வேலை

சுகாதாரம் காப்பதில் விழிப்புணர்வு இல்லை; துாய்மை பணியாளர்களுக்கு இரட்டிப்பு வேலை

உடுமலை; உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 16ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் நேரடியாக வீடுகள், வணிக நிறுவனங்களுக்குச்சென்று, குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.தினமும், 28 டன் வரை குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரமாகவும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மறு சுழற்சிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.இதில், துாய்மை பணியாளர்கள் நேரடியாகச்சென்று, குப்பை சேகரிக்கும் போது, பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அலட்சியம் காரணமாக, மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரிக்காமல், ஒரே கழிவாக வழங்குகின்றனர்.அதே போல், நகராட்சியில் பொது இடங்களில் கழிவுகள் கொட்ட தடை விதிக்கப்பட்டு, குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சில பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளை, ஒட்டுமொத்தமாக பொது இடங்களில் வீசிச் செல்கின்றனர்.இதனால், தரம் பிரிக்காத கழிவுகள் அதிகரிப்பதால், குட்டைத்திடலில் கொண்டு வந்து, அவற்றை துாய்மைப்பணியாளர்கள் தரம் பிரித்து, நுண் உரக்குடில்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.சுகாதார அலுவலர்கள் கூறியதாவது: பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அலட்சியம் காரணமாக, பொது இடங்களில் கழிவுகள் கொட்டுவது மற்றும் தரம் பிரிக்காமல் வழங்கும் செயல்கள் அதிகரித்து வருகிறது.'நமது நகரின் துாய்மை; நமது பெருமை' என உணர்ந்து, சுகாதாரப்பணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, விதிமீறல்களில் ஈடுபடும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, உரிய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஈடுபட்டால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பொதுமக்கள், பொது இடங்களில் வீசாமல், குப்பையை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்கி, நகரின் துாய்மைப்பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை