வரத்து குறைந்ததால் எலுமிச்சை விலை உயர்வு
உடுமலை ; உடுமலை சந்தைக்கு வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.கோடை கால வெப்பம் தணிக்க எலுமிச்சை பழச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. உடுமலை பகுதியில் எலுமிச்சை உற்பத்தி போதியளவு இல்லை. இதனால், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.முகூர்த்த சீசனில், எலுமிச்சைக்கு தேவை அதிகரித்து, விலை உயர்வது வழக்கம். கோடை காலங்களில் இயல்பான விலை இருக்கும். இந்த ஆண்டு, வழக்கத்தை விட, முன்பாகவே, கோடை வெயில் துவங்கி கொளுத்தி வருகிறது.இதனால், எலுமிச்சை தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது.தற்போது திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரத்து குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரித்துள்ளது. உடுமலை சந்தையிலும், சில்லறை வியாபாரிகளிடம் எலுமிச்சை விலை கிலோ 160 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.பருவமழை சீசன் துவங்கும் வரை, இதன் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.