ஊர் சுற்றலாம் வாங்க... மனம் லேசாகும் பாருங்க!
சர்வதேச அளவில் 'டாலர் சிட்டி' என்ற பெருமையை பெற்றிருக்கிறது திருப்பூர். 24 மணி நேரமும் இயங்கும் இயந்திரங்களோடு, சுழலும் தொழிலாளர்கள் நிறைந்த உழைப்பாளின் நகரம். அவ்வப்போது கிடைக்கும் விடுமுறையில், ஊட்டி, கொடைக்கானல் என, குளுகுளு பிரதேசங்களை நோக்கி படையெடுக்கும் தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் ஏராளம்.ஆனால், அந்த வாய்ப்பையும், அதற்கான பொருளாதார சூழலையும், மிகக்குறைந்த சதவீத்தினரே பெற்றிருக்கின்றனர். மற்றபடி, திருப்பூர் நகரில் பொழுதுபோக்கு என்பது, திரையரங்குகள் தான். அதை தவிர வேறெந்த பொழுது போக்கு அம்சங்களும் திருப்பூரில் இல்லை என்ற மேலோட்டமான பார்வை; இந்த திரையை விலக்கி, உள்ளூரில் உள்ள சுற்றுலா தளங்களை, வளங்களை நினைவுப்படுத்துகிறது, மாவட்ட சுற்றுலாத்துறை.---மன அழுத்தம் 'பறந்து விடும்'சுற்றுலா தலம் என்பது பொழுது போக்கு இடமாக மட்டுமின்றி, மன அழுத்தத்தை போக்கும் இடமாகவும் இருக்க வேண்டும். திருப்பூரில் நகரில் ஆண்டிபாளையம் குளம், நஞ்சாராயன் பறவைகள் சரணாலயம் ஆகியவை, பல ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.ஆண்டிபாளையம் குளத்தில் விரைவில் படகு சவாரி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாவட்டத்தில், திருமூர்த்தி அணை, அமராவதி அணை, முதலை பண்ணை, கேரள எல்லையான சின்னாறு, பஞ்சலிங்க அருவி ஆகியவை மன மகிழ்ச்சி தரும், பொழுது போக்கு தளங்களாக உள்ளன.மலைகள், மரங்கள், நீர்வீழ்ச்சி என, வழிநெடுகிலும் கொட்டிக்கிடக்கும் இயற்கையின் கொடைகள், உள்ளூர் மக்களுக்கு கிடைத்த வரம். கடந்த, 2023 - 2024ல், திருப்பூர் மாவட்டத்துக்கு, சுற்றுலா பயணிகளாக, 50 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். உள்ளூரில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், அதன் வாயிலாக பொருளாதாரம் மேம்படவும் சுற்றுலாத்துறை முனைப்புக் காட்டி வருகிறது.- அரவிந்தகுமார்மாவட்ட சுற்றுலா அலுவலர்--மறைந்து போன சுற்றுலாமுன்பெல்லாம் குடும்பம், நண்பர்கள் சகிதமாக கூட்டம், கூட்டமாக சுற்றுலா செல்வது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது. ஆனால், தற்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட தனித்தனியாக சுற்றுலா செல்கின்றனர். மாணவ, மாணவியரை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.அருகிலுள்ள சுற்றுலா தலங்கள் குறித்து, உள்ளூர் மக்களுக்கே தெரிவதில்லை. திருமூர்த்தி மலையில் உள்ள நீர்வீழ்ச்சி, மனதிற்கு இதம் தரும். உள்ளூரில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளாக வருவோருக்கு குடிநீர், கழிப்பறை, வாகன பார்க்கிங் வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதுடன், பாலிதின் தவிர்ப்பு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த, சம்மந்தப்பட்ட அனைத்து துறையினரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.- நாகராஜன்மாவட்ட சுற்றுலாவளர்ச்சி சங்க தலைவர்
இன்று, உலக சுற்றுலா தினம்
ஆண்டு தோறும், செப்., 27ல், உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் முன்வைக்கப்படுகிறது. அவ்வகையில், சுற்றுலா வாயிலாக கிடைக்கும் பொழுது போக்கு மட்டுமின்றி, சுற்றுலா சார்ந்த வேலை வாய்ப்பை உருவாக்கி, உள்ளூர் பொருளாதார வளங்களை வலுப்படுத்துவதை மையமாக கொண்டு, இந்தாண்டு, 'சுற்றுலா மற்றும் அமைதி' என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.