கொடுஞ்சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை பறிபோகும் உயிர்கள்
அவிநாசி; 'கோவை - கொச்சி இடைபட்ட தேசிய நெடுஞ்சாலையில், பழங்கரை, அவிநாசி, தெக்கலுார் உள்ளிட்ட இடங்கள் விபத்து அபாயம் நிறைந்ததாக மாறியிருக்கிறது. 'சாலை விபத்து நேரிடவே கூடாது' என்பதற்காகத்தான், தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி, ஆறு வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதையும் தாண்டி விபத்து நேரிடுவது, துரதிர்ஷ்டம் என்று சொல்வதை காட்டிலும், 'நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் வாகனம் மீது மோதி ஏற்படும் விபத்துகள் தான் அதிகம் என்பது சம்பந்தப்பட்ட துறையினரின் மெத்தனம்' என்கின்றனர் பொதுமக்கள்.கடந்த, 25ம் தேதி பெங்களூருவில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கார், டீசல் இல்லாமல் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், இரு பெண்கள் உட்பட மூன்று பேர் அதே இடத்திலேயே பலியாகினர்; விபத்துக்குள்ளான கார், உருக்குலைந்தது. இதுபோன்ற விபத்துகள் இச்சாலையில் அடிக்கடி நடக்கிறது.அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிகுமார் கூறியதாவது:அவிநாசி - தெக்கலுார் இடைப்பட்ட பைபாஸ் சாலையில், கடந்த, 3 ஆண்டில் நின்று கொண்டிருந்த வாகனங்களின் மீது ஏற்பட்ட விபத்து, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தான் அதிகம். கோவை - கொச்சி நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இச்சாலையில் சுங்கம் வசூலிக்கும் பணியில் ஐ.வி.ஆர்.சி.எல்., நிறுவனத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்ந்துகொண்டே செல்கிறது. பெரும் தொகையை சுங்கமாக செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, உயிர்காக்கும் உரிமைகள் மறுக்கப்படுகிறது.அதாவது, நெடுஞ்சாலை ஓரம் வாகனம் பழுதாகி நின்றாலோ, எரிபொருள் இல்லாமல் நின்றாலோ, அந்த வாகன ஓட்டிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர்களால் வாகனங்களை ஓட்ட முடியாமல் போனோலோ, டோல்கேட் நிறுவனத்தினர் உதவ வேண்டும். 'ரெகவரி' வாகனத்தின் உதவியுடன் அந்த வாகனங்களை அங்கிருநது அகற்றி, வாகனங்களை அப்புறப்படுத்தி, அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பார்க்கிங் இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ரோந்து சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற கண்காணிப்பும், வாகன ஓட்டிகளுக்கு கிடைக்க வேண்டிய சேவையும் கிடைப்பதாக தெரியவில்லை. நெடுஞ்சாலை விபத்துக்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதை என்பதை காட்டிலும், சம்மந்தப்பட்ட துறையினரின் மெத்தனம் தான் காரணம். எனவே, வரும் நாட்களில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.உதவிக்கு உதவும் '1033'தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்து, வாகனங்கள் பழுதாகி நிற்பது, மருத்துவ உதவி உள்ளிட்ட சமயங்களில் '1033' என்ற கட்டணமில்லா அழைப்பில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ஆனால், இந்த விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை.