உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான ரோட்டிலுள்ள நுழைவாயில் நாறுது உள்ளாட்சி நிர்வாகங்களால் மக்கள் பாதிப்பு

பிரதான ரோட்டிலுள்ள நுழைவாயில் நாறுது உள்ளாட்சி நிர்வாகங்களால் மக்கள் பாதிப்பு

உடுமலை, ; உடுமலை - பொள்ளாச்சி ரோடு, நகரின் நுழைவாயில் பகுதி குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.உடுமலை, பொள்ளாச்சி ரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட மேற்கு பகுதி நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வரும் நுழைவு பகுதியாக உள்ளது.தேசிய நெடுஞ்சாலையான இந்த ரோட்டின் இரு புறமும், குப்பை, கழிவுகள், இறைச்சி, மீன் கழிவுகள் மற்றும் அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.நகரை ஒட்டியே, கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியும் உள்ளதால், அந்த ஊராட்சி பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் கொட்டப்படுவதோடு, நகர பகுதியில் சேகரமாகும் கழிவுகள், இறைச்சி, மீன் கடைகளிலிருந்து கழிவுகள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. நகராட்சி எல்லையிலிருந்து, ரோட்டின் இரு புறுமும் கழிவுகள் கொட்டப்படுவதால், நகருக்குள் நுழையும் மக்களை துர்நாற்றத்துடன் வரவேற்கும் அவல நிலை உள்ளது.மேலும், தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால், சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, அவற்றுக்கு தீ வைத்து எரிக்கப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.அதே போல், ஏழு குளங்களிலிருந்து உபரி நீர் வெளியேறும் ஓடையாகவும், மேற்கு பகுதி கிராமங்களில் பெய்யும் மழை நீர் இணைந்து, உப்பாறு ஓடையில் கலக்கும் ராஜவாய்க்கால் இப்பகுதியில் உள்ளது. இதனையும் ஆக்கிரமித்து, மலைபோல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், அகலமாக இருந்த ராஜவாய்க்கால் குறுகலாக மாறியுள்ளதோடு, மழை காலங்களில், வெள்ளம் வெளியேற வழியின்றி, நகரிலுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.நகராட்சி மற்றும் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் இருந்தாலும், நகரை ஒட்டிய பகுதிகள் குப்பை கிடங்காக மாற்றும் அவல நிலை உள்ளது.எனவே, இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும், தொடர்ந்து கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ