உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூட்டியே கிடக்கும் நுாலகங்கள்; கிராம மக்கள் வேதனை

பூட்டியே கிடக்கும் நுாலகங்கள்; கிராம மக்கள் வேதனை

உடுமலை; உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், கடந்த 2006ல், கிராமப்புற மக்கள், நுாலக வசதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அண்ணா மறுமலர்ச்சி நுாலகத்திட்டம் கொண்டுவரப்பட்டது.ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கண்காணிப்பில், கிராமப்புறங்களில் இந்நுாலகங்கள் துவங்கப்பட்டன.மாவட்ட நுாலக ஆணைக்குழுவின், பகுதி நேர நுாலகம் இல்லாத கிராமங்களில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் துவக்கப்பட்டன. இதில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் நுாலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு மாதம், 750 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.இந்நுாலகத்தில், புத்தகங்களை படிப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு; புத்தகங்கள் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டதுடன், வாசகர்களுக்கும், பயனுள்ள பொழுதுபோக்கு இடமாகவும் திகழ்ந்தது.ஆட்சி மாற்றத்திற்கு, பிறகு அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களின் நிலை பரிதாபமாக மாறத்துவங்கியது. புதிய புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யாதது; சம்பளம் வழங்குவதில் இழுபறி ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டன.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில், இருபதுக்கும் மேற்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நுாலகங்கள் பயன்பாடு இல்லாமல், பூட்டிக்கிடக்கின்றன. சில நுாலக கட்டடங்கள் பராமரிப்பின்றி, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. நாள்தோறும் வாசகர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய செய்தித்தாள்களும் நுாலகங்களில் வைக்கப்படுவதில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது.கிராம மக்கள் கூறியதாவது: நுாலக வசதிக்காக ஏங்கிய கிராமங்களுக்கு, அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் வரப்பிரசாதமாக அமைந்தன. தற்போது, நுாலக கட்டடங்கள், சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது. இந்நுாலகங்களை, மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ் இணைத்து, முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ