உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தாழ்வான பாலம்; வெள்ளத்துக்கு அகழி: டிசைன் அப்படித்தான் என சூப்பர் பதில்

 தாழ்வான பாலம்; வெள்ளத்துக்கு அகழி: டிசைன் அப்படித்தான் என சூப்பர் பதில்

பல்லடம்: பல்லடம் அருகே தாழ்வாக பாலம் அமைத்துவிட்டு, வெள்ளம் செல்வதற்கு 'அகழி' அமைத்தது நெடுஞ்சாலைத்துறை. 'டிசைன் அப்படித்தான்' என்று 'சூப்பர் பதில்' சொல்லியிருக்கிறார்கள், அதிகாரிகள். பல்லடம் அடுத்த, பள்ளிபாளையம் -- பூமலுார் வழித்தடத்தில், கணக்கம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள நீரோடையில், தரைமட்ட பாலம் கட்டப்பட்டது. ஓடையின் மட்டத்துக்கு இணையாக பாலம் கட்டப்பட்டதை அறிந்து, தன்னார்வலர் மணி என்பவர், நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். ஒன்றரை ஆண்டுக்குப் பின் அதற்கான பதில் கிடைத்துள்ளது. மணி கூறியதாவது:: கணக்கம்பாளையம் கிராமத்தில் உள்ள நீரோடையின் மேல் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் கீழ் பகுதி, ஓடையை தொடும் அளவுக்கு தாழ்வாக கட்டப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, டிசைன் அப்படித்தான் செய்யப்பட்டுள்ளது என்றனர். எனில், எவ்வாறு இதில் மழைநீர் செல்லும் என்ற கேள்வி எழுந்ததால், இதுதொடர்பாக மனு அளித்தேன். மனுவின் மீது, ஒன்றரை ஆண்டுகள் கழித்து பதில் கிடைத்தது. இதற்கிடையே, பாலத்தின் இரண்டு புறமும், மழைநீர் செல்லும் வகையில், 10 அடி ஆழத்துக்கு 'அகழி' தோண்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், இந்த ஓடை வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து சென்ற போது, போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இச்சூழலில், தரை மட்டத்துக்கு இணையாக பாலம் கட்டப்பட்டதுடன், 10 அடி பாலத்துக்கு அகழிகள் தோண்டப்பட்டது நெடுஞ்சாலைத் துறையின் புது டிசைனாக உள்ளது. திட்டமிடாமல் பாலம் கட்டப்பட்டதுடன், அதனை, மறைக்கும் விதமாக தற்போது அகழிகள் ஏற்படுத்தி உள்ளனர். மழைக்காலங்களில், ஓடைவழியாக வெள்ளம் சென்றால், அகழிகளால் மிகப்பெரும் அபாயம் உள்ளது. எனவே, இது குறித்து ஆராய்ந்து, மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை