சந்தைக்கு வரத்து குறைவு; கொத்தமல்லி விலை உயர்வு
உடுமலை : வரத்து குறைவால், சந்தையில், கொத்தமல்லி விலை உயர்ந்து வருகிறது; மழையால், உற்பத்தி பாதித்துள்ளதால், விவசாயிகளுக்கு பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக கொத்தமல்லி சாகுபடி செய்கின்றனர். தொழிலாளர் தேவை மற்றும் சாகுபடி செலவு குறைவு காரணமாக, தென்னந்தோப்புகளிலும், ஊடுபயிராக இச்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.கடந்த வாரம் வரை, உடுமலை சந்தைக்கு 3 ஆயிரம் கட்டுக்கும் அதிகமாக கொத்தமல்லி தழை வரத்து இருந்தது. கடந்த சில நாட்களாக பரவலாக உடுமலை பகுதியில் மழை பெய்து வருகிறது.இதனால், கொத்தமல்லி அறுவடை உள்ளிட்ட பணிகள் பாதித்து, உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால், சந்தையில் விலை அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி, அரை கிலோ கொத்தமல்லி தழை 42 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.விவசாயிகள் கூறுகையில், 'மழை துவங்கியுள்ளதால், கொத்தமல்லி உற்பத்தி பாதித்துள்ளது; இதனால், தற்போதைய விலை உயர்வு எங்களுக்கு பலன் அளிக்காது,' என்றனர்.