திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரையில், நீண்டகாலமாக முடங்கியுள்ள ரயில்வே உயர் மட்டப் பாலம் கட்டும் பணியை மீண்டும் துவங்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இப்பணிகளுக்கு நில உரிமையாளர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், மண்ணரை பகுதியில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் வகையில் உயர்மட்டப்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், ரயில்பாதை அமைந்துள்ள இடத்தில் ரயில்வே துறை சார்பில் பாலம் கட்டப்பட்டு விட்டது. இப்பணி முடிந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாலத்தின் இருபுறமும் அணுகு ரோடு அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறையில் ஊரக ரோடுகள் பிரிவினர் மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில், இப்பாலம் திட்டமிடப்பட்டு இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு தடைகள் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி, விலைமதிப்பு நிர்ணயம், உரிமையாளர்களுடன் ஒப்பந்தம், கோர்ட் வழக்குகள் என இதன் நடவடிக்கைகள் நீண்டு கொண்டு சென்றது. இப்பிரச்னைகள் எல்லாம் தற்போது ஓரளவு நிறைவுக்கு வந்த நிலையில், பாலம் கட்டுமானப் பணியை துவங்க நெடுஞ்சாலைதுறையினர் திட்டமிட்டனர். இதற்கான ஆயத்தப் பணிகளை துவங்கும் வகையில், பாலம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் குழு பார்வையிடச் சென்றது. அங்கு சென்ற அதிகாரிகளை நில உரிமையாளர்கள் தரப்பில் சிலர் தடுத்து, வாக்குவாதம் செய்தனர். கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய விலை வழங்கவில்லை; பாலம் வரைபடம் உள்ளிட்ட தகவல் தரவேண்டும். முழுமையான நிலம் கையகப்படுத்தும் பணியை சட்டரீதியாக முடிக்காமல் பாலம் பணியை துவங்கக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது. உரிய விளக்கம் அளித்து பணியைத் துவங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
உடனடியாக துவக்கப்படும்
பாலம் கட்டுமானப் பணிக்கு, 11,500 ச.மீ. பரப்பளவு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு மதிப்பீடு செய்து தொகை வழங்கி நிலத்தின் உரிமை மாற்றப்பட்டு விட்டது. விலை குறைவு என சிலர் வழக்கு தொடுத்த நிலையில், கோர்ட் உத்தரவின் பேரில் அதற்கான தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பாலம் அமைக்க மேலும், 1,264 ச.மீ. நிலம் கூடுதலாக தேவைப்படுகிறது. இதற்காக சிறப்பு வருவாய் பிரிவினர் வாயிலாக உரிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 12 பேருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் நான்கு பேர் மட்டும் நிர்ணயித்த தொகை குறைவு என தெரிவித்தனர். கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய தொகை வழங்கி, நிலம் பெயர் மாற்றம் செய்த பின்னரே அந்த இடத்தில் பணி துவங்கும். தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே பணியை துவங்கவுள்ளோம். இது குறித்து நில உரிமையாளர்களுக்கு விளக்கம் அளித்து கட்டுமானப் பணி உடனடியாக துவங்கப்படும். - நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்