பிற மாநில வாகனங்கள் குறித்த கண்காணிப்பு; விதிமீறலை தடுக்க தேவை
உடுமலை : விதிமுறைகளை மீறி, அதிகளவு பயணியரை ஏற்றிக்கொண்டு, அதி வேகத்தில் செல்லும் பிற மாநில வாகனங்கள் குறித்து கண்காணித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலையில் இருந்து கேரளா மாநிலம், மறையூர், மூணாறுக்கு அதிகளவு மக்கள், சுற்றுலா மற்றும் இதர தேவைகளுக்காக செல்கின்றனர். அங்கிருந்தும், மருத்துவ சேவை மற்றும் தொழில் ரீதியாகவும் உடுமலைக்கு வந்து செல்கின்றனர்.உடுமலை - மூணாறு வழித்தடத்தில், போதிய பஸ்கள் இல்லாத நிலையில், மறையூர் வரை, ஜீப்கள் இயக்கப்படுகின்றன.உடுமலையில் இருந்து செல்லும் இந்த ஜீப்களில், விதிகளை மீறி அதிகளவு பயணியரை ஏற்றி செல்வது அதிகரித்துள்ளது. ஜீப் மட்டுமல்லாது இதர வாகனங்களிலும், அதிகளவு பயணியரை ஏற்றி வருகின்றனர்.வாடகை வாகனங்கள் மட்டுமில்லாமல், சொந்த வாகனங்களையும் வணிக ரீதியாக பயன்படுத்துகின்றனர்.அடர்ந்த வனப்பகுதியில், அமைந்துள்ள மலைப்பாதையிலும், உடுமலை நகரிலும், இந்த கேரளா மாநில வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.உடுமலை பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடுகளில், அச்சுறுத்தும் வகையில், இயக்கப்படும் பிற மாநில வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடுமலை பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உடுமலை வட்டார போக்குவரத்து துறையினர் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பிற மாநில வாகனங்கள் குறித்து கண்காணித்து, அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் விதிமீறல் வாகனங்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மேலும், ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியிலுள்ள போலீஸ் செக்போஸ்ட்டில், பிற மாநில வாகனங்களை முழுமையாக பரிசோதிக்கவும், திருப்பூர் எஸ்.பி., உத்தரவிட வேண்டும்.