உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்காணிப்பு தொடர வேண்டும்: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

கண்காணிப்பு தொடர வேண்டும்: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர்: கடந்த, 11ம் தேதி, எர்ணாகுளம் - பாட்னா ரயிலில், முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலத்தினர் அமர்ந்ததால், பிரச்னை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, திருப்பூரில், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., தலைமையில் குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், 'ஒலிபெருக்கியில், முன்பதிவு பெட்டிகளில், முன்பதிவில்லா டிக்கெட் பெற்றவர்கள் ஏறக்கூடாது. எச்சரிக்கையை மீறி ஏறினால், அபராதம் விதிக்கப்படும். உடனடியாக அந்த பெட்டியில் இருந்து பொது பெட்டிக்கு மாற்றப்படுவீர்கள்,' என எச்சரித்தனர். மதியம் திருப்பூர் வந்த ஆலப்புழா - தன்பாத் (எண்:13352) ரயிலில் ஏற, இரண்டாவது பிளாட்பார்மில், 500க்கும் அதிகமானோர் காத்திருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக இவர்களில் சிலர் முன்பதிவு பெட்டியில் ஏறிட கூடும் என்பதால், ரயில் பெட்டிக்கு இரண்டு போலீசார் நின்று கண்காணித்தனர். பயணிகள் ரயிலில், ஏறி இறங்குவதை, பாதுகாப்பு படையினர் கண்காணித்தனர். முன்னதாக ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. லட்சுமணன் தலைமையில் ரயில்வே போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

பெயரளவுக்கு கூடாது

திருப்பூரை தினமும், 37 ரயில்கள் கடந்து செல்கிறது. இவற்றில் அதிகமாக பயணிகள் ஏறி, இறங்குபவையாக எட்டு முதல் பத்து ரயில்கள் மட்டுமே உள்ளது. பண்டிகை நாளில், சென்னை வழியாக பயணிக்கும் ரயில்கள் உட்பட, 15 ரயில்களில் ஏறுவதற்கு தான் கூட்டம் முண்டியடிக்கிறது. வந்தே பாரத், உதய், ஜனசதாப்தி, சதாப்தி, சென்னை மெயில் சூப்பர்பாஸ்ட் உள்ளிட்ட முழுதும் முன்பதிவு பெட்டி கொண்ட ரயில்கள் வரும் போது, முன்பதிவு செய்த பயணிகள் எவ்வித தள்ளுமுள்ளு இல்லாமல் ரயில்ஏறிக் கொள்கின்றனர். பயணிகள் அதிகளவில் பயணிக்கும் ரயில் வரும் போது மட்டுமாவது, பிளாட்பார்மில் தற்போது போலவே கண்காணிப்பு மற்றும் சோதனையை போலீசார், பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள வேண்டும். பெயரளவுக்கு ஓரிரு ரயில்களை கண்காணித்து விட்டு, பிளாட்பார்மில் இருந்து இவர்கள் நகர்ந்து கொண்டால், முன்பதிவு பெட்டிகளில், ஓபன் டிக்கெட் பெறுவோரின் அத்துமீறல் அனைத்தையும் உடனடியாக தடுக்க முடியாது. இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஓபன் டிக்கெட் பெற்று, முன்பதிவு பெட்டியின் இருக்கைகளையும், இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டால், பயணம் சுகமானதாக இல்லாமல் சுமையானதாகவே மாறும். ரயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் குழு பண்டிகை காலம் மட்டுமின்றி, பிற நாட்களிலும் குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமாவது தொடர வேண்டும் என்பது ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை