பருவ மழையால் மரக்கன்றுகள் நடவு தீவிரம்; வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் ஆர்வம்
உடுமலை; பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், வனத்துக்குள் திருப்பூர் -11 திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது. பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணை, தொழிற்சாலை வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், கோவில் நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது. நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் பசுமை வளர்க்கும் பணியாகவும், குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களினால் மரச்சாகுபடி திட்டமாக விவசாய நிலங்களில், மரக்கன்றுகள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பருவ மழையும் தீவிரமடைந்துள்ளதால், மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மடத்துக்குளம், கணியூர் விவசாயி சையத் புகாரிக்கு சொந்தமான நிலத்தில், 350 தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அதே போல், குடிமங்கலம், பெரிய பட்டி கள்ளப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சாமிநாதனுக்கு சொந்தமான நிலத்தில், 250 மகாகனி மற்றும் தேக்கு, 250 என, 500 மரக்கன்றுகள் நடவு செய்து தரப்பட்டுள்ளது. மேலும், விருகல்பட்டி, விமல்ராஜ் - ராஜேந்திரனுக்கு சொந்தமான கோழிப்பண்ணை வளாகத்தில் தேக்கு, 100, மகாகனி, 250, சந்தனம், 150 என, 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து, மரமாகும் வரை பராமரித்து, பசுமை வளர்ப்பு பணியில் ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.