பலகார சீட்டு மோசடி ஸ்டேஷன் முற்றுகை
திருப்பூர்: திருப்பூர், ராதா நகரில் துரை என்பவர் சீட்டு நடத்தி வந்தார். மக்கள் வாரந்தோறும், 100 முதல், ஆயிரம் ரூபாய் வரை என, பல லட்சம் ரூபாய் கட்டினர். 52வது வார முடிவில், அவர்களுக்கு இனிப்பு மற்றும் கார வகைகளுடன் சீட்டு தொகை வழங்க வேண்டும். ஆனால், பணத்தை தராமல் காலம் கடத்தினர். இதுகுறித்து மக்கள் கேட்ட போது, தற்போதைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பணம் தர முடியாது என துரை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வலியுறுத்தினர். இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்க கூறி, போலீசார் அனுப்பி வைத்தனர்.