ப ல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, மனித குல நாகரிகம் என்பது, நன்னீர் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றங்கரையோரங்களில் தான் துவங்கியது. ஆண்டு முழுக்க கரைபுரண்டோடும் ஆற்றங்கரை நீரை பயன்படுத்தி, விவசாயம் செய்தனர் அங்கு வாழ்ந்த மக்கள், காடு, மலை, மேடு கடந்து அண்டை மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்று வணிகம் செய்தனர். நீரும், நிலமும் வளமுடன் இருந்தன. மக்களும் செழிப்புடன் வாழ்ந்தனர். நீர்நிலையுள்ள இடங்களில் தான் மக்கள் கூடுவர் என்பதால், அங்கு கோவில்கள் எழுப்பப்பட்டன. தெய்வங்கள் குடிகொண்டன. நடனம், நாட்டியம் உட்பட கலைகளும் வளர்ந்தன. மனித நாகரிகத்தின் வளர்ச்சி என்பது, 3,000 ஆண்டுகளை கடந்த போதிலும், அந்த நாகரிக அடையாளத்தின் எச்சங்கள் இன்றளவும் கிடைத்து கொண்டே இருக்கிறது. நல்லாற்றின் பயணம் கடந்த, 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன், கோவை மாவட்டம், அன்னுார் அருகே ஊத்துபாளையம் என்ற இடத்தில் இயற்கையாக ஊற்றெடுத்த நீர், இயற்கையே வடிவமைத்து கொடுத்த வழித்தடத்தில் 'நல்லாறு' என்ற பெயரில் பயணித்தது. கஞ்சப்பள்ளி என்னும் கிராமத்திலுள்ள குளத்தை நிரப்பும் நல்லாறு, அங்கிருந்து, அவிநாசி ஒன்றியம், கருவலுார், ராமநாதபுரம், நம்பியாம்பாளையம், ஆட்டையம்பாளையம் வழியாக, அவிநாசி தாமரைக்குளத்தில் சங்கமிக்கிறது. தொடர்ந்து, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக, திருமுருகன்பூண்டியை கடந்து, வெங்கமேடு, அங்கேரிபாளையம், நல்லாத்துப் பாளையம், பிச்சம்பாளையம், பொம்மநாயக்கன் பாளையம் மற்றும் கூலிபாளையம் வழியாக சென்று நஞ்சராயன் குளத்தில் கலக்கிறது. நல்லாற்றின் பயண துாரம், வெறும், 45 கி.மீ. என்ற போதிலும், லட்சக்கணக்கான மக்கள் வாழும் நகரங்கள், கிராமங்கள் உருவாக, இது அடித்தளமிட்டிருக்கிறது. தற்போதைய தலைமுறையின் வழித்தோன்றல்கள், நல்லாற்று நாகரிகத்தில் உருவானவர்கள் என்பதில் மிகையில்லை. நாகரிகத்தின் அடையாளம் திருப்பூர் வீரராசேந்திரன் ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது: ஆறுகளும், நதிகளும் தான், நாகரிகத்தின் தொட்டில்களாக இருந்துள்ள நிலையில், ஏறத்தாழ, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வடக்கில் உருவான நல்லாற்று கரையில், பல நாகரிகங்கள் உருவாகின. இதுவரை நல்லாறு நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று சான்றுகளின் படி, மாநிலம் கடந்து, உலகளாவிய வணிக தொடர்பில், இங்கு வாழ்ந்த மக்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும், தமிழ் மொழி மற்றும் எழுத்து வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பை செலுத்தியிருக்கின்றனர் என்பதும், தெரிய வந்துள்ளது. தமிழ் மொழி மற்றும் எழுத்து வளர்ச்சியின் பங்களிப்பில் கொங்கு மண்டலம் தனக்கென ஓரிடத்தை பிடித்திருக்க, இதுதான் முக்கிய காரணம். அதன் தொடர்ச்சியாக தான், இன்று வணிகத்திலும், பண்பாட்டிலும் கொங்கு மண்டலம் சிறந்து விளங்குகிறது. நல்லாறு நாகரிகத்தின் அடையாளமாக, அதன் வழித்தடமான சர்க்கார் பெரிய பாளையம் பகுதியில், பெருங்கற்காலம் எனப்படும், ஏறத்தாழ, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. நல்லாறு என்பது ஒரு நாகரிகத்தின் தொட்டில் என்பதில் மிகையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.