இலக்கு இல்லாத சொகுசு வாழ்க்கை... கொள்ளையருக்கு இலக்கான வீடுகள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்டு அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய, ஐந்து சப்-டிவிஷன்கள் உள்ளது. சமீப காலமாக காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.இம் மாதம் துவக்கத்தில், காங்கயத்தில், இரண்டு குடியிருப்பு பகுதியை நோட்டமிட்டு, நான்கு பேர் கொண்ட முகமூடி கும்பல், ஏழு வீடுகளில் கைவரிசை காட்டி, 25 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் கொள்ளையடித்தனர். இக்கும்பலை போலீசார் பிடிக்க சென்ற போது, ஆயுதங்களால் தாக்க முயற்சி செய்தும், வீடுகளின் மீது கற்களை வீசி தப்பினர். இதே பாணியில், உடுமலை, மடத்துக்குளத்தில் நடந்தது.16 வழக்கு பதிவுகடந்த மாதம், 27 முதல், செப்., 1 ம் தேதி வரை என, ஆறு நாட்களில் மட்டும், உடுமலை, காங்கயத்தில் தலா, ஆறு மற்றும் தாராபுரத்தில், நான்கு என, 16 வழக்கு பதியப்பட்டது. தொடர் குற்றங்களால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.துப்பாக்கி ரோந்துமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை நீக்கவும், போலீசார் மீது நடந்த தாக்குதல் முயற்சி காரணமாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, இரவு ரோந்து மேற்கொள்ளும் போலீசார், துப்பாக்கியுடன் செல்ல உத்தரவிடப்பட்டது.கைகொடுத்த 'சிசிடிவி'அடுத்தடுத்து நடந்த கொள்ளை தொடர்பாக அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டனர். சில இடங்களில் பதிவுகள் மூலம் தடயங்கள் கிடைத்தது. கடந்த, 20 நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் தனிப்படை போலீசார் தேடினர். கும்பல் தனித்தனியாக பிரிந்து சட்டீஸ்கர், பெங்களூருக்கு சென்றது தெரிந்தது. தீவிர தேடுதல வேட்டைக்கு பின், பதுங்கியிருந்த, முருகன் சிவகுரு, 45, ராஜா, 40, சுரேஷ், 34 மற்றும் தங்கராஜ், 55 என, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 32 சவரன் நகை, இரண்டு டூவீலர் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது தமிழகம் முழுவதும் மொத்தமாக, 75 வழக்குகள் இருப்பது தெரிந்தது.'சீசன்' கொள்ளையர்இதுகுறித்து போலீசார் கூறியதாவது:முகமூடி கொள்ளையர்களான ராஜா, தங்கராஜ் மீது, 19 வழக்கும், சுரேஷ் மீது, 15 வழக்கு முருகன் சிவகுரு மீது, 20 வழக்கும் உள்ளது. நான்கு பேர் மீது ஏராளமான வழக்கில் தொடர்பு உள்ளது. முருகன் சிவகுரு சட்டீஸ்கரில் உள்ளார்.நான்கு பேரும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் எந்த பகுதியில் கொள்ளையடிக்கலாம் என்று திட்டமிட்டு கைவரிசை காட்டி வந்தனர். நகரங்களை விட, புறநகரங்களில் குறிப்பிட்ட வீதியை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து வந்தனர். பணம், நகையை பிரித்து கொண்டு, தனித்தனியாக சொகுசாக செலவு செய்து ஹாயாக இருந்தனர். பணம் அனைத்தும் செலவான பின்னும், மீண்டும் கைவரிசை காட்டினர்.கடந்த மாதம் போலீசார் கண்காணிப்பை நோட்டமிட்டு களமிறங்கினர். முதலில் காரில் வந்து, அந்த காரை, குறிப்பிட்ட பகுதியில் மறைத்து விட்டு, ஏதாவது வாகனங்களில் ஏறி வருகின்றனர். தாராபுரத்தில், சில வீடுகளில் கைவரிசை காட்டி விட்டு, அங்கிருந்து டூவீலருடன் தப்பி செல்பவர்கள், உடுமலையில் இதே வேலையை செய்கின்றனர். திருடிய டூவீலரை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு, வேறு டூவீலர் மூலமாக காங்கயம் நோக்கி சென்று அங்கு வீடுகளில் கொள்ளையடிக்கின்றனர். அங்கிருந்து வேறு வாகனங்கள் மூலமாக தப்பித்து, பின் காரை எடுத்து கொண்டு தப்பித்தது தெரிந்தது.இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளதால், நான்கு பேரையும் போலீஸ் 'கஸ்டடி'யில் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். மற்ற மாவட்ட போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சுவரில் ஓட்டை போடும் கும்பல்
கொள்ளை கும்பல் கடந்த ஏப்., மற்றும் ஜூன் மாதம் திண்டுக்கல்லில், ஐந்து வழக்கு, கன்னியாகுமரியில் ஒரு வழக்கு, திருப்பூர் மாவட்டத்தில், 16 வழக்கு மற்றும் ஜூன் மாதம் மூன்று வழக்கு என, மொத்தமா, 25 வழக்குகளில், 97 சவரன் நகை, ரூ.8.71 லட்சம், ஐந்து டூவீலர் கொள்ளையடித்தனர். இந்த கும்பல் மீது, சேலம் ஆத்துாரில், குன்னுார் போன்ற இடங்களில், நகை கடையில் சுவரை ஓட்டை போட்டு, 200 மற்றும், 80 சவரன் நகை கொள்ளையடித்தனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தது தெரிந்தது.இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், கோபாலகிருஷ்ணன், விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் அமைந்திருந்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டினார். சமீப காலமாக மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தி வந்த கொள்ளை கும்பலை போலீசார் பிடித்தால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.