| ADDED : நவ 18, 2025 04:13 AM
திருப்பூர்: புதிய வருமான வரி சட்டம் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் 20ம் தேதி கோவையில் நடக்கிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, புதிய வருமான வரிச்சட்டம் - 2025, அடுத்த நிதியாண்டு 2026 ஏப். 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இச்சட்டத்தில் உள்ள விதிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறையாக அறிந்து கொண்டு செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரித்துறையில் உள்ள அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி, புதிய வருமான வரிச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, வரி செலுத்தும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வருமான வரித்துறையின் முழுப் பணியாளர்களையும் தயார்படுத்தும். அதற்காக, நாடு தழுவிய பயிற்சியின் ஒரு பகுதியாக, புதுடில்லியில் உள்ள மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் பயிற்சி இயக்குனரகம், புதிய வருமான வரிச் சட்டம் - 2025, குறித்த ஒரு நாள் பயிற்சியை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரும் 20ம் தேதி கோவையில் பயிற்சி நடைபெறுகிறது. இதில், நாக்பூர் வருமான வரித் துறையின் இயக்குனர் ஜெனரல் சிபிச்சென் கே மேத்யூ மற்றும் சென்னை -மண்டல வளாக கூடுதல் இயக்குனர் ஜெனரல் பழனிகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். இது தவிர, புதிய வருமான வரிச் சட்டத்தை அமைத்த குழுவின் மூத்த அதிகாரிகள், வரிவிதிப்புத் துறையின் பல்வேறு துறைகளில் நிபுணர்கள், புதிய வருமான வரிச் சட்டம் - 2025 குறித்த பயிற்சிகளை வழங்குகின்றனர்.