உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம் மாணவர்கள் சாதிக்க புதிய திட்டம்

 புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம் மாணவர்கள் சாதிக்க புதிய திட்டம்

திருப்பூர்:நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, வேகமாக தேர்வெழுத பயிற்றுவிக்கும் விதமாகவும், போட்டித்தேர்வுகளில் சிறக்கவும் உதவியாக, 'ஓபன் புக் டெஸ்ட்' திருப்பூரில் இன்று பரீட்சார்த்த முறையில் நடத்தப்படுகிறது. இதில், கேள்விகளுக்கு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. பள்ளி மற்றும் வகுப்பு அளவில் முதல் மற்றும் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற இப்போது இருந்தே தயாராகி விடுவர். ஆனால், ஏதோ ஒருவித பதட்டம், அவசரத்தால், இவர்களுக்கு முழுமையாக, குறிப்பிட்ட நேரத்துக்குள் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. ஓரிரு மதிப்பெண்களில் நுாறு மதிப்பெண்ணை தவற விடுகின்றனர். இத்தகைய மாணவர்கள் விரைவாக ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு, அடுத்தடுத்த பகுதிகளை பொறுமையுடன் படித்து, பதட்டமின்றி தேர்வுகளை எழுத உதவும் வகையில் 'ஓபன் புக் டெஸ்ட்' என்ற திட்டத்தை பரீட்சார்த்த முறையில், திருப்பூர் மாவட்ட கல்வித்துறை முன்னெடுத்துள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள, 76 மேல்நிலைப்பள்ளி, 87 உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் பருவத்தேர்வு, காலாண்டு, இரண்டாம் பருவத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு மையம் உருவாக்கப்பட்டு இவர்களுக்கு தனியே தேர்வுகள் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்புக்கு, 100 மதிப்பெண்ணுக்கு (ஒரு மதிப்பெண் வினா), 30 நிமிடமும், பிளஸ் 2வுக்கு, 100 மதிப்பெண்ணுக்கு, 45 நிமிடமும் கால அவகாசம் தரப்பட உள்ளது. இன்று பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாராபுரம் என்.சி.பி., பள்ளியில் நடக்கிறது. திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை கல்வி மாவட்டங்களை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட, 270 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் ஒரு மதிப்பெண் வினாவுக்கு விடையளிக்க நன்றாக படிக்கும் மாணவர்களும் தடுமாறக் கூடாது. புத்தகத்தில் இந்த பகுதியில் இந்த வினா இடம் பெற்றுள்ளது; இதற்கு பதில் இது தான் என்பதை சட்டென நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக பரீட்சார்த்த முறையில் 'ஓபன் புக் டெஸ்ட்' நடத்தப்படுகிறது.புத்தகம் அருகில் இருக்கும்; புத்தகத்தை பார்க்காமல் தேர்வெழுத முடிந்தவர்கள் அப்படியும் தேர்வெழுத அனுமதி தரப்படும். குறிப்பிட்ட நேரத்துக்குள், நுாறு மதிப்பெண்களுக்கும் சரியான விடையை மாணவ, மாணவியரை எழுத செய்வதற்காக இத்திட்டம் கலெக்டர் ஒப்புதலுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. - புனித அந்தோணியம்மாள், முதன்மை கல்வி அலுவலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை