இடுவாயில் குப்பை கூடாது: பல்லடம் எம்.எல்.ஏ. மனு
திருப்பூர்: இடுவாய் ஊராட்சியில், மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் மனு கொடுத்துள்ளார். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அவர் அளித்த மனு: பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையத்தில் உள்ள, திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடுவாய் மற்றும் சுற்றியுள்ள, 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் காத்திருப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இங்கே குப்பை கொட்டப்படுவதால், விவசாய நிலங்கள் மாசுபடுவதுடன், சுற்று வட்டாரத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். போராட்டம் நடத்தும் பொது மக்களின் கருத்தினை மாநகராட்சி நிர்வாகம் கேட்டு உரிய தீர்வை எடுக்க வேண்டும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, குப்பை கொட்டுவதை நிறுத்தி வைக்க ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.