வேகத்தடைக்கு அடையாளமில்லை; அதிகரிக்கும் விபத்துகளால் அச்சம்
உடுமலை: உடுமலையில், பிரதான ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசாததால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. உடுமலையிலுள்ள பிரதான ரோடுகளான, தாராபுரம் ரோடு, திருப்பூர், தளி ரோடு மற்றும் நகராட்சி பராமரிப்பிலுள்ள அனுஷம் ரோடு, காந்தி நகர் உள்ளிட்ட பெரும்பாலான ரோடுகள் மற்றும் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது. ஆனால், வேகத்தடை உள்ளது குறித்து முன்னதாகவே வைக்கப்படும் அறிவிப்பு பலகை மற்றும் வேகத்தடை உள்ளது என வாகன ஓட்டுனர்களுக்கு தெரியும் வகையில் வெள்ளை கோடு, ஒளிரும் ஸ்டிக்கர்கள் என, எந்த விதமான பாதுகாப்பு குறியீடுகளும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வேகத்தை கட்டுப்படுத்தி, விபத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளே, விபத்துக்கு வழிவகுக்கிறது. அதே போல், நகர பகுதியில் பாதாள சாக்கடை ஆளிறங்கும் குழி பகுதியில், பல இடங்களில் உயரமாக அல்லது குழியாக உள்ளதோடு, இக்குழி குறித்தும் எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கவில்லை. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனால், ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே, ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு உரிய குறியீடுகள் அமைக்கவும், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.