வடகிழக்கு பருவமழை காலம் துவங்குகிறது! எச்சரிக்கையுடன் இருக்க மின்வாரியம் அட்வைஸ்
திருப்பூர்; 'மழைக்காலங்களில், உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை, மின் கம்பிகளுக்கு கீழ் இயக்குவதை தவிர்க்க வேண்டும்; அறுந்து விழும் மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது,'' என, மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி அறிவுறுத்தி உள்ளார். பொதுமக்களுக்கான அறிவுறுத்தல் பின்வருமாறு: மின்பாதையில் மின்கம்பி அறுந்து கிடந்தால், அருகில் சென்று தொடக்கூடாது. மின் கம்பங்கள் பழுதடைந்திருந்திருந்தாலோ, மின் கம்பிகள் தொய்வாக இருந்தாலோ, தொட முயற்சிக்காமல், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மின் தடையை சரிசெய்ய, மின்வாரிய பணியாளர் அல்லாத நபர்கள், மின்கம்பத்தில் ஏறிக்கூடாது. மின் தடை ஏற்பட்டால், அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தெரிவித்து, மின்வாரிய பணியாளர் மூலம் மட்டுமே, மின்தடையை சீராக்க வேண்டும். மழைக் காலத்தில், இடி அல்லது மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்க கூடாது. மின் கம்பிகள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளில் இருக்க வேண்டும். கால்நடைகளை மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பியிலோ கட்டக்கூடாது. உயரமான வாகனங்கள் டிப்பர் லாரிகளை, மின் கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில், மின் வேலிகளை அமைப்பது தண்டணைக்குரிய குற்றம். மின்சார ஒயரிங் பணிகளை, அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். 'பிரிட்ஜ்', கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய, மூன்று பின்சாக்கெட் உள்ள பிளக்குகள் முலமாக மட்டுமே மின்இணைப்பு கொடுக்க வேண்டும். மின் கசிவு தடுப்பான் (ஈ.எல்.சி.பி./ ஆர்.சி.சி.பி ) வீடுகளில் உள்ள மெயின் ஸவிட்ச் போர்டில் பொருத்தி, மின்கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்கலாம். சுவிட், பிளக்குகளில், குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்கலாம். மின்விபத்து அபாயம் இருப்பதால், மின்கம்பத்தில் உள்ள, 'ஸ்டே' கம்பியின் மீது, கொடி கயிறு கட்டி, துணி காயவைக்க கூடாது. இடி அல்லது மின்னலின் போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி மற்றும் 'மொபைல்' போனை பயன்படுத்தக்கூடாது. இடி அல்லது மின்னலின் போது, திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்கக்கூடாது; ஜன்னல், இரும்பு கதவு ஆகியவற்றை தொடக்கூடாது. குளியலறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது. மழையின் போது, அறுந்துவிழும் மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது. உடனடியாக, மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பிகளை உரசும் மரக்கிளைகளை வெட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களை அணுகலாம். கட்டுமான பணியின் போது, அருகில் மின்கம்பி இருந்தால், போதிய இடைவெளி அவசியம். உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பணிகளை செய்ய வேண்டும். மின்விபத்தை தவிர்க்க, கட்டாயம், மின்கசிவு தடுப்பானை பொருத்த வேண்டும். மின் விபத்தில் தீ ஏற்பட்டால், தீண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டாம். மின்சார தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்திவிட வேண்டும். அவசர கால இடர்பாடுகள் தொடர்பாக, மின்னகம் எண்ணை தொடர்புகொண்டு புகார் செய்யலாம். அதன்படி, 94987 94987 என்ற எண்களில் தெரிவிக்கலாம்