குறுமைய போட்டிக்கு அதிகாரிகள் இடையூறு
திருப்பூர்; அவிநாசி குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் நடத்தப்பட்டது. ஓட்டம், ஈட்டி எறிதல், தட்டெறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்குரிய ஏற்பாடுகளை, குறுமைய போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர். இந்நிலையில், வரும், 15ம் தேதி சுதந்திர தின விழா, இந்த மைதானத்தில் தான் நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர். விளையாட்டு போட்டி நடத்துவதற்கான 'டிராக்' உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் மீதே பொக்லைன் வாகனம் இயக்கி, விழா ஏற்பாடுகளில் கவனம் செலுத்த துவங்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த குறுமைய விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள், விளையாட்டு போட்டி முடியும் வரை, தங்கள் பணியை ஒத்தி வைக்குமாறு கூற, போட்டி நடந்து முடிந்த இடத்திற்கு சென்று, சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இச்சம்பவம் விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.