அசுர வேகத்தில் செல்லும் ஆம்னி வேன்கள்
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், சில ஆம்னி வேன்கள் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக செல்வதால், விபத்துகள் அதிகரிக்கின்றன.உடுமலை சுற்றுப்பகுதியில், குறிப்பாக நகரை சுற்றிலும் அரசு, தனியார் பள்ளிகள் 20க்கும் அதிகமாக உள்ளன. ஜூன் முதல் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. அனைத்து பெற்றோரும், பஸ் வசதியை பயன்படுத்துவதில்லை. பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு ஆம்னி வாகனங்களும் செயல்படுகின்றன.குழந்தைகளை ஏற்றிச்செல்லும் இந்த வாகனங்கள், காலை, மாலை நேரங்களில் நகரில் அசுர வேகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. எதிரே வருவோரை அச்சுறுத்தும் வகையில், ஆம்னி வாகனங்கள் மோசமாக செல்வதால், பலரும் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.பழநிரோடு, தளி ரோடு, ஐஸ்வர்யா நகர், காந்திநகர் பகுதிகளில் இந்த வாகனங்கள் அதிவேகமாக பறந்து செல்கின்றன. வளைவுகளிலும் வேகத்தை குறைக்காமல், மாணவர்களையும் பயமுறுத்தும் வகையில்தான் செல்கின்றன.போக்குவரத்து போலீசார், விதிமுறை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.